ADDED : மார் 18, 2025 10:36 PM

விஜயபுரா : ''ஹிந்துத்துவாவில் இருந்து விலகிய பா.ஜ.,வை மீண்டும் ஹிந்துத்துவா பாதைக்கு கொண்டு வருவோம்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் மாநில கட்சி உருவாக உள்ளதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நாங்கள் புதிய கட்சியை உருவாக்கவில்லை. அதற்கு மாறாக, ஹிந்துத்துவாவில் இருந்து விலகிய பா.ஜ.,வை மீண்டும் ஹிந்துத்துவா பாதைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்.
மத்திய பிரதேசம், புதுடில்லி, அசாம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உட்பட அனைத்து மாநிலங்களிலும் ஹிந்துத்துவாவின் அடிப்படையில் பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது.
கர்நாடகாவிலும் ஹிந்துத்துவாவின் அடிப்படையில் ஆட்சிக்கு வருவோம். ஹிந்துத்துவாவுக்கு ஆதரவாக பேசும் தலைவர்களை கட்சி அடையாளம் காண வேண்டும்.
எங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., மீது நம்பிக்கை உள்ளது. ஆனால், எடியூரப்பா, விஜயேந்திரா மீது நம்பிக்கை இல்லை. எத்னால், விஜயேந்திரா பற்றி கட்சி மேலிட தலைவர்களுக்கு தெரியும். என்னை வெளியேற்ற முடியாது என்பது விஜயேந்திராவுக்கும்,அவரது ஆதரவாளர்களுக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.