UPDATED : ஜூலை 27, 2025 02:35 AM
ADDED : ஜூலை 27, 2025 01:52 AM

லத்துார்: மஹாராஷ்டிராவில் எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகள் விடுதியில் இருந்த 16 வயது சிறுமியை விடுதி ஊழியர் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமானார். இது தொடர்பாக விடுதி ஊழியர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிராவின் லத்துார் மாவட்டத்தில் உள்ள ஹாசேகான் கிராமத்தில், 'சேவாலயா' என்ற பெயரில் எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளுக்கான விடுதி உள்ளது. இங்கு 23 சிறுவர்கள், ஏழு சிறுமியர் தங்கி படிக்கின்றனர்.
இங்கு தங்கியுள்ள 16 வயது சிறு மியை, 2023 ஜூலை 13 முதல் கடந்த 23 வரையிலான இரு ஆண்டுகளில் விடுதி ஊழியர் நான்கு முறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி அங்குள்ள புகார் பெட்டியில் எழுதி போட்டபோது விடுதி நிர்வாகிகள் அதை கிழித்து போட்டதாக சிறுமி தெரிவித்தார்.
மேலும், பலாத்காரம் செய்தது குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என, அந்த ஊழியர் சிறுமியை மிரட்டி உள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் குன்றியதால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, விடுதி நிர்வாகம் சிறுமி ஒப்புதலின்றி அவருக்கு கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தது.
இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி நிறுவனர் ரவி பாபட்லே, விடுதி கண்காணிப்பாளர் ரக்ஷனா, ஊழியர்கள் அமித் மஹாமுனி, பூஜா வாக்மரே ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.