ம்! கர்நாடகா - மஹாராஷ்டிரா இடையே பஸ்கள் நிறுத்தம்: மராத்தி பேசும் விவகாரத்தில் தொடரும் பதற்றம்
ம்! கர்நாடகா - மஹாராஷ்டிரா இடையே பஸ்கள் நிறுத்தம்: மராத்தி பேசும் விவகாரத்தில் தொடரும் பதற்றம்
ADDED : பிப் 23, 2025 11:17 PM

பெங்களூரு,: மாரத்தி பேசச் சொல்லி பெலகாவியில் நடத்துநரை தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா - மஹாராஷ்டிரா இடையே அரசு பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்களிடையே பயணம் செய்வதற்கு, ரயில்கள் மற்றும் தனியார் வாகனங்களை மக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பெலகாவியில் இருந்து சுலேபாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சென்றது. வழியில் மைனர் சிறுவனும், மைனர் பெண்ணும் ஏறினர். சிறுமி இலவசமாக பயணம் செய்யலாம். அதனால் உடன் வந்த சிறுவனுக்கு டிக்கெட் வாங்கும்படி நடத்துநர் கூறினார்.
தாக்குதல்
இதனால் கோபமடைந்த சிறுவன், நடத்துநரை திட்டி உள்ளார். அதேவேளையில், யாருக்கோ போன் மூலம் தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் சாலையை மறித்து நின்றனர். பஸ் நின்றதும், 20க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்குள் ஏறி, நடத்துநர், ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர்.
காயமடைந்த நடத்துநர் மஹாதேவப்பா மாலப்பா ஹுக்கேரி, ஓட்டுநர் சாடல் சாப் மோமின் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த டி.சி.பி., ரோஹன் ஜெகதீஷ், ஓட்டுநர், நடத்துநரை தாக்கியவர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைத்தார்.
இதையடுத்து, சன்ன பாலேகுந்த்ரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட மாருதி துருமாரி, ராகுல் ராஜு நாயுடு, பாலுக்கேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நேற்று இதே கிராமத்தைச் சேர்ந்த மோகன் ஹன்சினலா என்பவரையும் கைது செய்தனர். இதனால் கைதானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
போக்சோ வழக்கு
சம்பவம் நடந்து மறுநாளான நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில் மரிஹால் போலீஸ் நிலையத்திற்கு வந்த மைனர் சிறுமி, நடத்துநர் மஹாதேவப்பா மாலப்பா ஹுக்கேரி மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதை அறிந்த கன்னட அமைப்பினர் ஆவேசம் கொண்டனர். நடத்துநர் மீது போக்சோ வழக்குப் பதிவானதை கண்டித்து, மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், சித்ரதுர்கா மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை 48 ல், ஹிரியூரின், குய்லால் சுங்கச்சாவடி அருகே போராட்டம் நடத்திய நவ நிர்மாண் சேனா அமைப்பினர், அவ்வழியாக வந்த மஹாராஷ்டிரா பஸ்சை நிறுத்தி, பஸ்சில் கருப்பு மை பூசினர். பின், பஸ்சை ஓட்டி வந்த ஓட்டுநர் ஹரி ஜாதவ் முகத்திலும் கருப்பு மை பூசி, எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் உள்ள எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகி கிரண் சமிதியினர் மற்றும் மஹாராஷ்டிரா அரசை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கருப்பு
இதை கண்டித்து, மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரிலும் மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனை அமைப்பினர், கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் புனேயில் இருந்து பெலகாவிக்கு புறப்பட்ட கர்நாடக அரசுக்கு சொந்தமான 'அம்பாரி உத்சவ்' பஸ்சை நிறுத்தினர். பஸ் வெளிப்புறத்தின் முழுதும் கருப்பு மையால் மராத்தியில் எழுதினர்.
இதற்கிடையில், சித்ரதுர்காவில் மஹாராஷ்டிரா மாநில அரசு பஸ் மீது கன்னட அமைப்பினர் கருப்பு மை பூசிய விவகாரம் தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்னிக் நேற்று கூறுகையில், ''எங்கள் அரசு பஸ், சித்ரதுர்கா வழியாக சென்றபோது, தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
''இவ்விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும். அது வரை, மஹாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு எந்த பஸ்சுகளும் செல்லாது,'' என்றார்.
அதுபோன்று, கர்நாடகாவில் நிப்பானி, சிக்கோடி, பெலகாவி வழியாக கோலாபூருக்கு தினமும் 120 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
இச்சம்பவத்தின் எதிரொலியாக, மஹாராஷ்டிராவுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இரு மாநிலங்கள் இடையே ஏற்பட்டுள்ள தாக்குதல், எதிர்தாக்குதல் காரணமாக, பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதேவேளையில், இரு மாநிலங்கள் இடையே அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால், மஹாராஷ்டிரா செல்வோரும், கர்நாடகா செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பஸ்கள் கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அங்கிருந்து அந்தந்த மாநில பஸ்களில், அவரவர் ஊருக்கு சென்று வருகின்றனர்.
சிலர் மாற்று ஏற்பாடாக, ரயிலில் பயணம் மேற்கொண்டனர். இரு மாநில அரசு பிரதிநிதிகளும் பேசி, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எனினும் தனியார் வாகன போக்குவரத்தில் எந்த பாதிப்பு இல்லை என்பதால், அவற்றை நம்பி மக்கள் பயணம் செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
� கர்நாடகாவுக்கு புறப்பட்ட 'அம்பாரி உத்சவ்' பஸ் முழுவதும், மராத்தி அமைப்பினரால் கருப்பு மையால் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இடம்: மஹாராஷ்டிரா. � பஸ்கள் கிடைக்காததால் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த பயணியர். இடம்:
பெலகாவி மத்திய பஸ் நிலையம்.

