ADDED : பிப் 21, 2025 05:36 AM

குடகின் சோம்வார்பேட் அலேகட்டே கிராமத்தை சேர்ந்த அஸ்லாம் அஸ்மா - பானு தம்பதியின் மகள் தானியா, 14. அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு, 5 வயதில் இருந்து ஹாக்கி மீது ஆர்வம் அதிகம். தனது ஊரில் நடந்த ஹாக்கி கோடை கால முகாமுக்கு சென்று பயிற்சி எடுத்தார். சிறப்பாக விளையாடியதால் பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார். தனது திறமையை மெருகேற்றி போட்டிகளில் அசத்தினார்.
இதனால், தேசிய அளவில் நடக்கும் போட்டிகளிலும் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வீராங்கனையாக மட்டுமின்றி கேப்டன் ஆகவும் ஜொலித்தார்.
பெங்களூரில் கடந்த ஆண்டு நடந்த மினி ஒலிம்பிக் போட்டியில் தான்யா தலைமையிலான கர்நாடகா அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. ஹாக்கியை தவிர கால்பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டிலும் ஆர்வம் காட்டுகிறார்.
தினமும் காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை; மாலை 4:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை பயிற்சி செய்கிறார்; படிப்பிலும் கவனம் செலுத்துகிறார்.
தான்யா கூறுகையில், ''விளையாட்டில் பல சாதனையாளர்கள் உள்ளனர். எனக்கும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. எதிர்காலத்தில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் இல்லை. ஆனாலும் எனது ஆர்வத்தை புரிந்து கொண்டு விளையாட அனுமதித்த பெற்றோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

