புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
UPDATED : டிச 12, 2024 06:25 AM
ADDED : டிச 11, 2024 09:38 PM

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது.
இதனால், இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 30 பேர் கொண்டதேசிய மீட்பு படையினர், அதி நவீன உபகரணங்களுடன் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.