ADDED : டிச 09, 2024 06:52 AM

சாம்ராஜ் நகர்: சாம்ராஜ்நகர், ஹனுாரின் கன்னுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மா, 17. இவர் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.யு.சி., படிக்கிறார்.
இவர் நேற்று முன்தினம் மதியம், கல்லுாரி முடிந்து தோழிகளுடன் வீட்டுக்கு, சிக்கரங்கநாத ஏரி பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தோழியர், பாலத்தின் மீது நின்று, யார் அதிக துாரத்தில் பூக்களை வீசுகின்றனர் என, போட்டி வைத்தனர்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ராஜம்மா, பாலத்தில் ஏறி நின்று பூக்களை துாரமாக வீச முற்பட்டார்.
இவ்வேளையில் கால் தவறி, நீரில் விழுந்தார். இதை கவனித்த அங்கு நின்றிருந்த ஊர்க்காவல் படை ஊழியர் கிருஷ்ண மூர்த்தி, தாமதிக்காமல் நீரில் குதித்தார். மாணவி நீரில் மூழ்காமல் காப்பாற்றினார். அப்பகுதியினரின் உதவியுடன் மாணவியை மேலே துாக்கி, மருத்துவமனையில் சேர்த்தனர்.
'அவரது உயிருக்கு ஆபத்து இல்லை' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.