வட மாவட்ட பிரச்னைகளில் விவாதம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதி
வட மாவட்ட பிரச்னைகளில் விவாதம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதி
ADDED : டிச 15, 2024 10:55 PM

பெங்களூரு: ''மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மீதான, 150 கோடி ரூபாய் லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக, சட்டசபையில் விவாதிக்கப்படும்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வக்பு வாரிய சொத்து ஆக்கிரமிப்பு விஷயத்தில், மவுனமாக இருக்கும்படி மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தி இருந்தார். 150 கோடி ரூபாய் தருவதாக பணத்தாசை காட்டியதாக, சிறுபான்மை பிரிவினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் அன்வர் மானப்பாடி குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் உள்ளன.
தற்போது அன்வர் மானப்பாடி, மாற்றி பேசுகிறார். விஜயேந்திரா 150 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முற்பட்டது, யாருக்கும் தெரியாது. அன்வர் கூறியதால் மட்டுமே, வெளிச்சத்துக்கு வந்தது. அவர் கூறியதை, அரசு தீவிரமாக கருதுகிறது. இது குறித்து, சட்டசபையில் விவாதிக்கப்படும்.
மனைவியின் தொல்லையால் வெறுப்படைந்து, தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷ் வழக்கு தொடர்பாக அவரது மனைவி, மாமியார், மைத்துனர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூடுதல் விசாரணைக்காக கஸ்டடியில் எடுக்கப்படுவர். அதுல் சுபாஷ் 40 பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதி வைத்துள்ளார். பெண்களுக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. தன்னை பணத்துக்காக நெருக்கினர் என, கடிதத்தில் குற்றம் சாட்டி உள்ளார்.
சட்டத்தால் ஆண்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இதில் மாற்றங்கள் செய்வது குறித்து, விவாதம் நடக்கிறது.
நீதிமன்றத்தில் விவாகரத்து அளிக்கும் போது, மனரீதியில் பாதிக்கப்படுகின்றனர். இது போன்று பல விஷயங்கள் உள்ளன.. இதில் எந்த விதமான மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி, ஆலோசிக்க வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில், முறைகேடு நடந்திருப்பதாக நீதிபதி மைக்கேல் குன்ஹா ஆணையம், அறிக்கை அளித்துள்ளது. அன்றைய அரசால் வாங்கப்பட்ட முக கவசம், பாதுகாப்பு கவச உடை உட்பட அனைத்து பொருட்கள் குறித்து, ஆய்வு செய்து ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்தார்.
இது தெரிந்தும், விசாரணை நடத்தாவிட்டால், அதிகாரிகளுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். எனவே எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். இதில் தவறு என்ன. கொரோனா நேரத்தில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுருட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவோம் என, உறுதி அளித்தோம். அதன்படி நடந்து கொள்கிறோம். முறைகேட்டில் தொடர்பு கொண்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளை (இன்று) முதல் மூன்று நாட்கள், சட்டசபையில் வட கர்நாடக பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட சொத்து பத்திரங்களில், வக்பு சொத்து என, பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக்கும் அரசின் மீது குற்றம்சாட்டினால் எப்படி. அரசின் சொத்து அரசிடமே வந்தால், அதில் தவறு என்ன.
இவ்வாறு அவர் கூறினார்.

