வங்கதேச அகதி மாணவர்களை கண்டுபிடிக்க உள்துறை உத்தரவு
வங்கதேச அகதி மாணவர்களை கண்டுபிடிக்க உள்துறை உத்தரவு
ADDED : டிச 21, 2024 10:44 PM
புதுடில்லி:மாநகராட்சிப் பள்ளிகளில், சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேச குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனரா? என, கண்டறிய டில்லி அரசின் உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி அரசின் உள்துறை செயலர், டில்லி மாநகராட்சி அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கடந்த 12ம் தேதி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, உள்துறை செயலர் கடந்த 18ம் தேதி பிறப்பித்த உத்தரவு:
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக டில்லியில் குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கின்றனரா? என்பதை கண்டறிய வேண்டும். மேலும், அந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழையும் சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும்.
இதுகுறித்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் 3:30 மணிக்குள் மாநகராட்சி துணை ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, சட்டவிரோத வங்கதேச குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை அடையாளம் கண்டு தடுக்க மாநகராட்சியின் கல்வித் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல சட்டவிரோதமாக டில்லியில் குடியேறியுள்ள வங்கதேசத்தினரின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கதேச குடும்பங்களின் குழந்தைகளுக்கு டில்லியில் பிறப்புச் சான்றிதழ் வழங்கக் கூடாது. ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களை ஆய்வு செய்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் ஏராளமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.