18 மாதங்களில் 11 பேர் கொடூர கொலை பஞ்சாபில் ஓரினச்சேர்க்கையாளர் கைது
18 மாதங்களில் 11 பேர் கொடூர கொலை பஞ்சாபில் ஓரினச்சேர்க்கையாளர் கைது
ADDED : டிச 26, 2024 12:58 AM
ரூப் நகர்: பஞ்சாபில், இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று 18 மாதங்களில் 11 பேரை கொலை செய்த சைக்கோ கொலைகாரனை, அந்த மாநில போலீசார் நேற்று கைது செய்தனர்.
பஞ்சாபில், மோத்ரா சுங்கச் சாவடியில் பணியாற்றி வந்த மனீந்தர் சிங், 37 என்பவர் ஆகஸ்ட் மாதம் மாயமானார்.
மூன்று குழந்தைகள்
சில நாட்களாக அவரை போலீஸ் தேடிய நிலையில், அதே மாதம் 18ம் தேதி, மணாலி சாலையில் பெட்ரோல் பங்க் அருகே அவரின் உடல் மீட்கப்பட்டது.
அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இறுதியில், மனீந்தரை கொலை செய்த ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்த ராம் சரூப், 33, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த 18 மாதங்களில் 11 பேரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
குற்றவாளியான ராம் சரூப்பிற்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர் ஓரினச்சேர்க்கையாளர் என தெரியவந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் ராமை ஒதுக்கிவிட்டனர். வேலையின்றி சுற்றி வந்த ராம், கொள்ளையடித்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
கொள்ளை
தன்னுடன் பழகியவர்களை வழியில் பார்த்ததும், இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று இறக்கி விடுவதாகக் கூறி அவர்களிடம் கொள்ளைஅடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஊருக்கு ஒதுக்குபுறமாக மறைவான பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றும், ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியும், பணம் கேட்டு மிரட்டியும் பலரை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
கற்கள் மற்றும் ஆயுதங்களால் தலையில் தாக்கியும் சிலரை கொலை செய்ததை ராம் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த, 18 மாதங்களில், 11 பேரை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், ஐந்து பேரின் கொலை மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய கொலைகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் மனநோயாளியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

