ADDED : மே 24, 2025 12:53 AM

புதுடில்லி:குஜராத்தின் விட்டல்பூர் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலையில், 920 கோடி ரூபாய் முதலீட்டில், நான்காம் அசெம்பிளி தடத்தை உருவாக்க உள்ளதாக, ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடம், 2027ல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தி திறன், 61.40 லட்சம் வாகனங்களாக உள்ளது. குறிப்பாக விட்டல்பூர் ஆலையின் உற்பத்தி திறன், 19.40 லட்சம் வாகனங்களாக உள்ளது.
தற்போது, இந்த முதலீட்டின் வாயிலாக, 6.50 லட்சம் வாகனங்கள் கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும்.
இதனால், இந்த ஆலையின் மொத்த உற்பத்தி திறன், 26 லட்சமாக உயர்வது மட்டுமின்றி, கூடுதலாக 1,800 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய, இந்த ஆலை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும், 2028க்குள் மின்சார வாகனங்களின் உற்பத்தி துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.