'ஹனி டிராப்' விவகாரம் கர்நாடகாவில்... விஸ்வரூபம்! சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர்கள் அமளி
'ஹனி டிராப்' விவகாரம் கர்நாடகாவில்... விஸ்வரூபம்! சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர்கள் அமளி
ADDED : மார் 22, 2025 05:18 AM

பெங்களூரு: கர்நாடக அமைச்சர் ராஜண்ணாவை, 'ஹனி டிராப்' செய்ய முயன்றது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி, சட்டசபையில் சபாநாயகர் இருக்கை முன், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்ஜெட் புத்தகம், காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீது வீசினர். இதையடுத்து, 18 எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதங்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்து, சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில அமைச்சர் ஒருவரை, பெண்களை வைத்து வசியப்படுத்தி மிரட்டும், 'ஹனி டிராப்' செய்ய முயற்சி நடந்ததாக நான்கு நாட்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.
நேற்று முன்தினம் சட்டசபை கூட்டத்தொடரின் போது, கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயற்சி நடந்ததாக, பா.ஜ., மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார். மேலும், இதை காங்., கட்சியின் மூத்த தலைவர் ஒருவரே செய்திருப்பதாகவும், அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு ராஜண்ணா பதில் அளிக்கையில், 'என்னை ஹனி டிராப் செய்ய முயன்றது பற்றி, இங்கு பேசுவதால் எதுவும் நடக்கப் போவது இல்லை. மாநில, தேசிய அரசியல் தலைவர்கள் 48 பேரின் ஆபாச வீடியோக்கள் இருக்கும் பென்டிரைவ் உள்ளது. 'சிடி' மற்றும் பென்டிரைவ் தொழிற்சாலையாக கர்நாடகா மாறி விட்டது' என, விரக்தியுடன் கூறினார்.
மசோதாக்கள் தாக்கல்
ராஜண்ணாவின் இந்த பதில் பா.ஜ.,வுக்கு அவல் கிடைத்தது போலானது. நேற்று காலை சட்டசபை துவங்கியதும், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்க, முதல்வர் சித்தராமையா எழுந்தார். அப்போது, எதிர்க்கட்சியான பா.ஜ., உறுப்பினர்கள், ஹனி டிராப் விவகாரத்தை மேற்கோள் காட்டி, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய சித்தராமையா, ''ஹனி டிராப் வழக்கை நாங்கள் விசாரிப்போம். யார் தவறு செய்து இருந்தாலும் தண்டிக்கப்படுவர். யாரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லை,'' என்றார்.
இதையடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை உயர்த்தும் மசோதா, கர்நாடக பண ஒதுக்கீடு மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா, அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 'இந்த மசோதாக்களுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தர வேண்டும்' என்று முதல்வர் கேட்டு கொண்டார்.
அதை ஏற்காத பா.ஜ., உறுப்பினர்கள், ஹனி டிராப் பிரச்னையை முன்னெடுத்து, மீண்டும் கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் தங்கள் இருக்கையில் எழுந்து வந்து, சபாநாயகர் காதர் இருக்கை முன் நின்று கொண்டனர். வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து வந்தனர். ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.
மன்னிக்க முடியாது
இந்த சூழ்நிலைக்கு மத்தியில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் காதர் அறிவித்தார். இதை கவனத்தில் கொள்ளாத பா.ஜ., உறுப்பினர்கள், 'சிடி'யை காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்ஜெட் புத்தகங்கள், சட்ட மசோதாக்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது வீசினர். சபாநாயகர் காதர் மீதும் காகிதங்கள் விழுந்தன.
சபாநாயகர் மீது காகிதங்கள் வீசப்பட்டதால், காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கோபம் அடைந்தனர். சபாநாயகரை சந்தித்து, 'பா.ஜ., உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். மதிய உணவு இடைவேளைக்குப் பின், சபை மீண்டும் கூடியது.
அப்போது, சபாநாயகர் காதர் கூறியதாவது:
சட்டசபையின் மாண்பை காப்பாற்றுவது, எம்.எல்.ஏ.,க்கள் கடமை. இங்கு வந்து பேசுவதற்கு நாம் பெருமைப்பட வேண்டும். என்னை நீங்கள் அவமதித்து இருந்தால், நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், சபாநாயகர் பீடத்தை அவமதித்து உள்ளீர்கள். இந்த பீடத்தை அவமதிப்பதை என்னால் பொறுத்துக் கொள்ளவும், மன்னிக்கவும் முடியாது.
இந்த சபையை அவமதித்த, பா.ஜ., உறுப்பினர்கள் தொட்டனகவுடா பாட்டீல், அஸ்வத் நாராயணா, பைரதி பசவராஜ், விஸ்வநாத், எம்.ஆர்.பாட்டீல், சன்னபசப்பா, சுரேஷ் கவுடா, உமாநாத் கோட்டியான், சரணு சலகர், சைலேந்திர பெல்டல், ராமமூர்த்தி, யஷ்பால் சுவர்ணா, ஹரிஷ், பரத் ஷெட்டி, முனிரத்னா, பசவராஜ் மத்திமோடு, தீரஜ் முனிராஜ், சந்துரு லமானி ஆகிய 18 பேரை ஆறு மாதங்களுக்கு 'சஸ்பெண்ட்' செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒருதலைபட்சமாக செயல்படுவதாக விமர்சனம் செய்தார். இதை பொருட்படுத்தாத சபாநாயகர் காதர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். ஆனால், உறுப்பினர்கள் கேட்கவில்லை.
இதனால் 18 பேரையும் சபையிலிருந்து வெளியேற்ற, பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார். பின், 18 உறுப்பினர்களையும் பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக துாக்கி வந்து வெளியே விட்டனர்.