ADDED : டிச 18, 2024 10:40 PM

பெங்களூரு; விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திறக்கப்பட்ட 'ஹாப் காம்ஸ்' எனும் தோட்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடைகள், பொருளாதார இழப்பால் அடுத்தடுத்து மூடப்படுகின்றன.
விவசாயிகளின் உற்பத்திகளுக்கு, நல்ல லாபம் கிடைக்கவும், பொதுமக்களுக்கு தரமான காய்கறிகள், பழங்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், 1965ல் மாநில அரசு 'ஹாப் காம்ஸ்' கடைகளை திறந்தது.
இங்கு மக்களுக்கு கைக்கு எட்டும் விலையில், தரமான காய்கறிகள், பழங்கள் கிடைக்கின்றன.
600 கடைகள்
பெங்களூரு, பெலகாவி, பீதர், பல்லாரி, சிக்கமகளூரு, ஷிவமொக்கா, கதக், தார்வாட், தாவணகெரே உட்பட, மாநிலம் முழுதும் 600 கடைகள் உள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
சமீப ஆண்டுகளில், ஆன்லைன் பிளாட்பாரம்களை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். தேவையான பொருட்களை ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து, வீட்டுக்கே வரவழைக்கின்றனர். விவசாயிகளிடம் தனியார் நிறுவனங்களே நேரடியாக பழங்கள், காய்கறிகளை கொள்முதல் செய்கின்றன. இதை அதிக விலைக்கு மக்களுக்கு விற்கின்றன.
ஆன்லைன் பிளாட்பாரம்களை மக்கள் பயன்படுத்துவதால், அரசு சார்ந்த ஹாப்காம்ஸ் மற்றும் பதப்படுத்தும் சொசைட்டி கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளது. நஷ்டம் ஏற்படுவதால் கடைகள் மூடும் நிலைக்கு வந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், 140 கடைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 89 கடைகள் பெங்களூரில் இருந்தன.
விசாரணை
ஹாப்காம்ஸ் கடைகள் மூட என்ன காரணம் என, மேல்சபையில் உறுப்பினர்கள், நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு தோட்டக்கலைத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் பதிலளித்து கூறியதாவது:
சில இடங்களில் ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இன்னும் புதிய ஊழியர்களை நியமிக்கவில்லை. எனவே ஹாப்காம்ஸ் கடைகளை மூட வேண்டி வந்தது.
மால்களில் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் போட்டி உள்ளது. தனியார் நிறுவனங்கள் பல இடங்களில் சிறப்பு கடைகளை திறந்துள்ளனர்.
பெங்களூரில் ஹாப்காம்ஸ் கடைகளை மூட, மற்றொரு காரணமாகும். சாலை விஸ்தரிப்பு மற்றும் மெட்ரோ பணிகளால், பெங்களூரின் சில கடைகள் மூடப்பட்டன. பல மாவட்டங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ஹாப்காம்ஸ் கடைகள் திறக்கப்பட்டதால், மக்கள் வருவதில்லை.
பீதரில் சிதிலமடைந்ததால், ஹாப்காம்ஸ் மூடப்பட்டது. தார்வாடில் கடை திறக்கப்பட்ட இடம் சர்ச்சையில் சிக்கியதே, கடை மூட காரணம். இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவுள்ளது. கலபுரகி, மாண்டியா, மைசூரு, விஜயபுராவில் வியாபாரம் நடக்காததால், கடைகள் மூடப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.