விபத்தில் சிக்கிய மணமகள் மணமேடையாக மாறிய மருத்துவமனை
விபத்தில் சிக்கிய மணமகள் மணமேடையாக மாறிய மருத்துவமனை
ADDED : நவ 22, 2025 12:52 AM
கொச்சி: கேரளாவில், திருமணம் நடக்கவிருந்த நாளன்று மணமகள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால், மணமக்களின் திருமணம் மருத்துவமனையின், 'எமர்ஜென்சி' அறையில் அவசரகதியில் எளிமையாக நடந்தது.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கொம்மாடியைச் சேர்ந்த அவனி என்ற இளம்பெண்ணுக்கும், தும்போலையைச் சேர்ந்த ஷரோன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தும்போலி என்ற இடத்தில் நேற்று மதியம் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மணமக்களின் வீட்டார் செய்தனர். உற்றார், உறவினர்களும் திருமணத்தில் பங்கேற்க ஆயத்தமாகினர்.
இந்நிலையில், திருமணத்துக்கு முன் அலங்காரம் செய்து கொள்வதற்காக மணமகள் அவனி, நேற்று அதிகாலை குமாரகோம் சென்றார். அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
இதில், அவனி படுகாயம் அடைந்தார். உள்ளூர் மக்கள், அவரை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகுத் தண்டில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து, எர்ணாகுளம் மாவட்டம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவனி மாற்றப்பட்டார்.
அவருக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே, விபத்து குறித்து கேள்விப்பட்ட அவனி மற்றும் மணமகன் ஷரோன் குடும்பத்தினர் கொச்சி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கியதால், அந்த நேரத்திற்குள் திருமணத்தை நடத்த வேண்டும் என இரு வீட்டாரும் மணமகனிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, மருத்துவமனையில் எளிமையாக திருமணம் நடத்த அனுமதி கோரப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அங்கிருந்த எமர்ஜென்சி அறையில் படுக்கையில் இருந்த அவனி கழுத்தில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் ஷரோன் தாலி கட்டினார். மணமக்களை இரு வீட்டாரும் ஆசீர்வதித்தனர். மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் அவனி - ஷரோனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

