மனைவியை கொன்று விபத்து என நாடகமாடிய விடுதி மேலாளர் கைது
மனைவியை கொன்று விபத்து என நாடகமாடிய விடுதி மேலாளர் கைது
ADDED : ஜன 22, 2024 06:53 AM

பனாஜி, ஜன. 22-
கோவாவில், மனைவியை கடலில் தள்ளி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவாவின் கோல்வாவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விடுதி ஒன்றில் கவுரவ் கட்டியார், 29, மேலாளராக பணியாற்றி வந்தார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த இவர், ஓராண்டுக்கு முன்பு தீக் ஷா கங்வார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தீக் ஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பிருப்பதாக கவுரவ் கட்டியார் சந்தேகப்பட்டார். இது தொடர்பாக தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கோவாவில் உள்ள கபோ டி ராமா கடற்கரை பகுதிக்கு, தன் மனைவி தீக் ஷாவை, கவுரவ் அழைத்து சென்றார். ஆனால், அவர் மட்டுமே தனியாக திரும்பி வந்துள்ளார்.
அங்கிருந்த சிலருக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தவே, போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து கவுரவிடம் போலீசார் விசாரித்த போது, மனைவி கடலில் விழுந்து இறந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை கடலில் தள்ளி கவுரவ் கொலை செய்தது, அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகி உள்ளது தெரியவந்தது.
அதில் மனைவியுடன் கவுரவ் கடலுக்கு செல்வதும், பின்னர் தனியாக திரும்பி வருவதும், மனைவி இறந்ததை உறுதி செய்ய, மீண்டும் கடலில் சென்று அவர் பார்ப்பதும் பதிவாகி உள்ளது.
அதுமட்டுமின்றி தாக்குதல் நடந்ததற்கான தடயங்களும் தீக் ஷாவின் உடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவியை கொலை செய்ததை கவுரவ் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மனைவி வேறு யாருடனோ தொடர்பு வைத்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவாக இந்த கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.