ADDED : நவ 17, 2024 11:09 PM

பேடரஹள்ளி: கடன் தொல்லையால், ஹோட்டல் உரிமையாளர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு பேடரஹள்ளி, முத்தினபள்ளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் பிடித்த தீயை அணைத்தனர்.
அப்போது காருக்குள் உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். முதலில் அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
விசாரணையில், உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டவர் நாகரபாவியின் பிரதீப், 42 என்பதும், பசவனகுடியில் ஹோட்டல் நடத்தியதும் தெரிந்தது.
ஹோட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த பிரதீப் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார்.
பசவனகுடியில் இருந்து காரில் புறப்பட்ட அவர் அன்னபூர்ணேஸ்வரி நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் 4 லிட்டர் பெட்ரோல் வாங்கியுள்ளார். பின், காரை முத்தினபள்ளிக்கு ஓட்டி சென்றது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
தொழிலில் நஷ்டம், கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. வேறு எதுவும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.