ADDED : நவ 09, 2024 12:28 AM

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினத்தவரை தாக்கிய ஆயுதமேந்திய கும்பல், ஆறு வீடுகளையும் தீ வைத்து எரித்தது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் மெய்டி, கூகி இனத்தவர் இடையே இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மோதல் தணிந்து அமைதி நிலவிய நிலையில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
ஜிரிபாம் மாவட்டத்தின் பழங்குடியின கிராமமான ஜைரான் ஹ்மாரில் நேற்று முன்தினம் நுழைந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள் திடீரென கிராம மக்களை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அங்கிருந்த ஆறு வீடுகளை தீ வைத்து எரித்தனர். வீடுகள் எரிந்து சேதமாகின.
இந்த திடீர் தாக்கு தலை சமாளிக்க முடியாத கிராம மக்கள் அருகேயுள்ள வனப்பகுதியில் ஓடி தஞ்சமடைந்தனர். இந்த தாக்குதலில் தங்கள் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக கூகி இனத்தவர் குற்றம்சாட்டினர்.
ஆனால், பெண் கொலையானதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. தீ வைப்பு மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.