தலைமறைவான ஜாகிர் நாயக் எப்படி வழக்கு தொடர முடியும்? உச்ச நீதிமன்றம் கேள்வி
தலைமறைவான ஜாகிர் நாயக் எப்படி வழக்கு தொடர முடியும்? உச்ச நீதிமன்றம் கேள்வி
ADDED : அக் 17, 2024 12:35 AM

புதுடில்லி :பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, ஒரே வழக்காக இணைக்கக் கோரி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்ட ஒருவர், அனைத்து வழக்குகளையும் இணைக்கக் கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?' என, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், 58, கடந்த 2012ல், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சர்ச்சை கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தப்பியோட்டம்
நம் அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவில், 2016 ஜூலையில் ஹோட்டல் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததை தொடர்ந்து, ஜாகிர் நாயக் நாட்டை விட்டு தப்பியோடினார்.
இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு குண்டு வெடிப்பை நடத்தியதாக ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜாகிர் நாயக் மீதான பயங்கரவாதத்துக்கு ஆள் திரட்டியது, நிதி வழங்கியது தொடர்பான வழக்குகளை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
நம் நாட்டை விட்டு தப்பியோடியதால், ஜாகிர் நாயக்கை தப்பியோடிய நபராக மத்திய அரசு அறிவித்தது.
இதற்கிடையே, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சர்ச்சை கருத்து தெரிவித்ததாக, பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை, ஒரே வழக்காக இணைக்கக் கோரி, மத போதகர் ஜாகிர் நாயக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அஹ்சானுதீன் அமானுல்லா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்ட ஒருவர், அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்?' என, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பிரமாண பத்திரம்
இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, ''இந்த வழக்கை திரும்ப பெறுவதாக ஜாகிர் நாயக் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்,'' என்றார். ஜாகிர் நாயக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக எனக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெறுகிறீர்களா, இல்லையா என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி, ஜாகிர் நாயக் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக பதிலளிக்கும்படி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டு, வழக்கை, வரும் 23க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.