இந்தியாவை வெறுப்பவர்கள் ராகுலின் நண்பராக இருப்பது எப்படி: பா.ஜ., கேள்வி
இந்தியாவை வெறுப்பவர்கள் ராகுலின் நண்பராக இருப்பது எப்படி: பா.ஜ., கேள்வி
UPDATED : செப் 17, 2025 02:49 AM
ADDED : செப் 17, 2025 02:47 AM

புதுடில்லி : காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி புகழ்ந்த நிலையில், 'இந்தியாவை வெறுப்பவர்கள் ராகுலின் நண்பராக இருப்பது எப்படி?' என, பா.ஜ., கேள்வி எழுப்பியது.
பாசிட்டிவ் மனநிலை மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்தியா, பாக்., இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி - 20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கடந்த 14ல் நடந்த லீக் போட்டியில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
இது தொடர்பாக, பாகிஸ்தானின் 'சம்மா டிவி'யில் நடந்த விவாத நிகழ்ச்சியில், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறுகையில், “இந்தியாவில் உள்ள தற்போதைய அரசு, ஆட்சி அதிகாரத்தில் எப்போதும் நீடிக்க, ஹிந்து - முஸ்லிம் விளையாட்டை விளையாடுகிறது.
''இது மிகவும் மோசமான மனநிலை. காங்., தலைவர் ராகுல் மிகவும் பாசிட்டிவ் மன நிலையை கொண்டுள்ளார். பேச்சு மூலம் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதில் அவர் உறுதியாக உள்ளார். நீங்கள் இன்னொன்றாக மாற முயற்சிக்க ஒரு இஸ்ரேல் போதாதா?” என்றார்.
புகழ்ந்துள்ளார்
இது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறுகையில், “பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பின், ராகுலை ஷாஹித் அப்ரிடி புகழ்ந்துள்ளார். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. நம் நாட்டை வெறுக்கும் அனைவரும், ராகுலின் நண்பராக இருப்பது எப்படி?” என, கேள்வி எழுப்பினார்.