பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் எவ்வளவு காலம் தான் சிறைவாசம்? உச்ச நீதிமன்றம் கேள்வி
பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் எவ்வளவு காலம் தான் சிறைவாசம்? உச்ச நீதிமன்றம் கேள்வி
ADDED : நவ 28, 2024 12:48 AM

புதுடில்லி :மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அம்மாநில முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை, எவ்வளவு காலம் சிறையில் அடைக்க முடியும்? என, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, 73, முந்தைய திரிணமுல் காங்., ஆட்சியில் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது, அரசு நிதியுதவி மற்றும் உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத நியமனங்களில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஜாமின் கூடாது
இதில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் குறித்து வழக்கு பதிந்த அமலாக்கத் துறையினர், 2022 ஜூலை 23ல், கோல்கட்டாவில் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தனர்.
இதையடுத்து, அமைச்சர் மற்றும் கட்சி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இரு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜி, ஜாமின் கோரி கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஏப்., 30ல் விசாரித்த உயர் நீதிமன்றம், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
பார்த்தா சாட்டர்ஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடுகையில், ''இரு ஆண்டுகளுக்கும் மேல் சாட்டர்ஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இன்னும் விசாரணையே துவங்கப்படவில்லை.
''மேலும், 183 சாட்சிகள், நான்கு துணை புகார்கள் இருப்பதால், வழக்கு விசாரணை விரைவில் முடிய வாய்ப்பில்லை. உடல்நலக் குறைவால் சாட்டர்ஜி சிறையில் அவதிப்படுகிறார்.
''பண மோசடி வழக்கில், அதிகபட்ச தண்டனை காலம் ஏழு ஆண்டுகள். இதில் மூன்றில் ஒரு பங்கை, ஏற்கனவே சிறையில் சாட்டர்ஜி அனுபவித்து விட்டார்,'' என்றார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கூறுகையில், ''பார்த்தா சாட்டர்ஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது. அவர் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார். ஜாமின் வழங்கினால், வழக்கின் சாட்சியங்களை அவர் அழிக்கக்கூடும்,'' என்றார்.
ஒத்திவைப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இரு ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்தா சாட்டர்ஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த வழக்கில் இன்னும் விசாரணையே துவங்கவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை, 183 சாட்சிகள் உள்ளனர்.
வழக்கு விசாரணைக்கு நீண்ட காலம் எடுக்கும். எவ்வளவு காலம் பார்த்தா சாட்டர்ஜியை சிறையில் அடைக்க முடியும் என்பது தான் கேள்வி.
இரு ஆண்டுகளுக்கும் மேல் எந்தவொரு விசாரணையும் நடக்காமல் வழக்கு உள்ளது. அப்படிப்பட்ட வழக்கில் சமநிலையை எவ்வாறு அடைவது?
பார்த்தா சாட்டர்ஜி மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதை புறக்கணிக்க முடியாது. விசாரணை முடிவில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்? 2 - 3 ஆண்டுகள் காத்திருப்பு என்பது சிறிய காலம் அல்ல.
அமலாக்கத் துறையின் சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்குகளில் தண்டனை விகிதம் என்ன? 60 - 70 சதவீதம் என்றால் கூட நாங்கள் புரிந்து கொள்வோம். ஆனால், இந்த வழக்குகளில் தண்டனை விகிதம் படுமோசம்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், பார்த்தா சாட்டர்ஜி மீது சி.பி.ஐ., பதிந்துள்ள வழக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி முகுல் ரோஹத்கியிடம் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிச., 2க்கு ஒத்திவைத்தனர்.