ஒரு நாடு ஒரு தேர்தல் அமல்படுத்தினால் எவ்வளவு செலவாகும் : தேர்தல் ஆணையம் மதிப்பீடு
ஒரு நாடு ஒரு தேர்தல் அமல்படுத்தினால் எவ்வளவு செலவாகும் : தேர்தல் ஆணையம் மதிப்பீடு
ADDED : ஜன 20, 2024 06:54 PM

புதுடில்லி: ஒரு நாடு, ஒரு தேர்தல் அமல்படுத்தப்பட்டால் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ. 10 ஆயிரம் கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோரை கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இக்குழு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலும் கருத்துக்களை கேட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒரு நாடு ஒரு தேர்தல் அமல்படுத்தப்பட்டால், 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் புதுப்பிக்க ரூ. 10 ஆயிரம் கோடி வரை செலவாகும் .
மேலும் இந்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற லோக்சபா தேர்தலையொட்டி 11.8 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்துவற்கான மதிப்பீடும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது