பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஒரே நாளில் ரூ.8.70 லட்சம் கோடி 'அவுட்'
பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஒரே நாளில் ரூ.8.70 லட்சம் கோடி 'அவுட்'
ADDED : ஜன 22, 2025 12:41 AM
மும்பை:அமெரிக்க அதிபராகியுள்ள டிரம்ப்பின் வரி விதிப்பு அதிரடி அறிவிப்புகளால், இந்திய பங்குச் சந்தைகளில் அச்சம் தொற்றி, பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
அதிபராக பொறுப்பேற்றதும், மெக்சிகோ உட்பட அண்டை நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள், பொது கரன்சியை கொண்டு வந்தால், 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
வரிவிதிப்பில் தெளிவற்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக, பங்குகளை முதலீட்டாளர்கள் வேக வேகமாக விற்றனர்.
இதனால், சென்செக்ஸ் 1,235 புள்ளிகள் சரிந்து 75,838 ஆனது. நிப்டி 320 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23,024ல் முடிந்தது.
நேற்றைய ஒருநாள் சரிவால், பங்கு முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சந்தை களின் கடும் சரிவுக்கு மேலும் சில விஷயங்களும் காரணமாகின.
காரணம் என்ன?
1 மீண்டும் அதிபராகியுள்ள டிரம்ப்பின் புதிய வரிவிதிப்பு கொள்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை
2 உற்பத்தி, கட்டமைப்பு, செலவழிப்பை ஊக்குவிக்க பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு
3 தொடரும் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம். நேற்று மட்டும் 6,409 கோடி ரூபாய் வெளியேறியது
4 நிறுவனங்களின் காலாண்டு முடிவு வெளியாகி வரும் நிலையில், ஊக்கம் அளிப்பதாக ஒன்றும் இல்லாதது
5 தொடரும் ரூபாய் மதிப்பு சரிவுடன், அரசின் முதலீட்டு செலவு குறைவதால் பங்கு முதலீட்டாளர்களிடம் தயக்கம்