UPDATED : டிச 18, 2024 11:19 PM
ADDED : டிச 18, 2024 11:15 PM

'சட்டமேதை அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டதால், பார்லிமென்டின் இரு சபைகளும் நேற்று முடங்கின.
அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழா விவாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் பேசும் போது, 'இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும், 'அம்பேத்கர்... அம்பேத்கர்...' என பேசுவது, 'பேஷன்' ஆகிவிட்டது.
'இதை சொல்வதற்கு பதிலாக, கடவுளின் நாமத்தை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்.
'இருந்தாலும், அம்பேத்கர் பெயரை காங்கிரஸ் கட்சியினர் இப்போதாவது உச்சரிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும், உண்மையான உணர்வுகளுடன் அவர்கள் செயல்பட வேண்டும்' என்றார்.
அமித் ஷாவின் இந்த பேச்சு, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்ட் முன் நேற்று காலை கூடினர்; கைகளில் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தியபடி, 'ஜெய்பீம்' என்ற கோஷங்களை எழுப்பினர்.
'அம்பேத்கர் பெயரை திரும்பத் திரும்ப உச்சரிப்போம்; அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும்; அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், 11:00 மணிக்கு அலுவல்கள் துவங்கியதும், லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஜெய்பீம் முழக்கங்களுடன் கடும் அமளியில் இறங்கின.
சபாநாயகர் இருக்கை முன் ஆவேசமாக திரண்டு, அமித் ஷாவின் பேச்சை கண்டித்து குரல் எழுப்பினர். இதனால், சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மதியம் 2:00 மணிக்கு லோக்சபா கூடியபோது, மீண்டும் அதே காட்சிகள் அரங்கேறியதை அடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும், அலுவல் துவங்கியதுமே இந்த பிரச்னை வெடித்தது. உள்துறை அமைச்சரை கண்டித்து கோஷங்களும், அம்பேத்கரை புகழ்ந்து முழக்கங்களும் சபையில் எதிரொலித்தன. இந்த ஆவேச அமளியை அடுத்து,ராஜ்யசபாவும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் சபை கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்தன. அப்போது பேசிய சபை தலைவர் ஜக்தீப் தன்கர், ''அண்ணல் அம்பேத்கர் மிகுந்த மரியாதைக்குரியவர். நம் நாட்டின் மிக உயர்ந்த தலைவர். எப்போதுமே மதிப்புமிக்க இடத்தில்தான் அவர் இருக்கிறார்,'' எனப் பேசத் துவங்கியதும், 'அதையெல்லாம் ஏற்க முடியாது. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்' எனக்கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் இறங்கினர்.
அப்போது பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் மதித்ததில்லை. நேரு ஆட்சியில், அம்பேத்கரை பல விஷயங்களில் காங்கிரஸ் அவமானப்படுத்தியது. தேர்தல்களில் அம்பேத்கருக்கு எதிராக வேலை செய்தது.
''அடுத்தடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதும், அவருக்கு பாரத ரத்னா வழங்க முன்வரவில்லை. பார்லிமென்டின் மைய மண்டபத்தில் அவரது புகைப்படம் வைக்கப்படவில்லை. அப்படிப்பட்ட காங்கிரஸ், இன்று அவர் மீது மரியாதை காட்டுவதாக நாடகமாடுகிறது,'' என்றார்.
அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''பிரச்னையை திசை திருப்ப வேண்டாம். அம்பேத்கரை அவமதித்து அமித் ஷா பேசியதற்கு என்ன பதில்? அது குறித்து பேசுங்கள். அவரது பேச்சை நாங்கள் ஏற்க மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்டாக வேண்டும். உள்துறை அமைச்சர் பதவியிலும் அவரை நீடிக்க விடமாட்டோம்,'' என்றார்.
அப்போது பேசிய சபை முன்னவர் ஜே.பி.நட்டா, ''அம்பேத்கர் விஷயத்தில் காங்கிரஸ் நாடகமாடுகிறது. அம்பேத்கரை ஒருபோதும் மதிக்காத காங்கிரஸ், இப்போது வேண்டுமென்றே வீண்பழி சுமத்துவதோடு, அவரை வைத்து அரசியல் லாபங்களுக்காக அமளி செய்கிறது,'' என்றார்.
இருப்பினும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., - எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் ஏற்பட்டதால் ராஜ்யசபாவும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -