மருத்துவ கல்லுாரி குடிநீர் தொட்டியில் அழுகிய மனித உடல் 10 நாட்களுக்கு பின் மீட்பு
மருத்துவ கல்லுாரி குடிநீர் தொட்டியில் அழுகிய மனித உடல் 10 நாட்களுக்கு பின் மீட்பு
ADDED : அக் 08, 2025 11:37 PM
லக்னோ:உத்தர பிரதேசத்தில் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டியில், அழுகிய நிலையில் மனித உடல் கண்டெடுக்கப்பட்டது. இதை அறியாமல், 10 நாட்களுக்கும் மேலாக அந்த குடிநீரை பருகி வந்த மாணவ - மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உ.பி.,யின் தியோரியா மாவட்டத்தில், மஹம்ரிஷி தேவராஹா பாபா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.
இதையடுத்து, கல்லுாரி நிர்வாகத்தின் உத்தரவின்படி, ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது அழுகிய நிலையில் மனித உடல் குடிநீர் தொட்டியில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குடிநீர் சேவை நிறுத்தப்பட்டது.
உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட கலெக்டர் திவ்யா மிட்டல் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை துவங்கினார். மீட்கப் பட்ட உடல், குடிநீர் தொட்டிக்குள், 10 நாட்களாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்த ஐந்து பேர் அடங்கிய குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, அந்த தொட்டியில் இருந்த குடிநீரை, மாணவர்கள் மட்டு மின்றி மருத்துவமனைக்கு வந்தவர்களும் பயன்படுத்தி உள்ளனர்.
இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவ கல்லுாரி முதல்வர் டாக்டர் ராஜேஷ் குமார் பர்ன்வால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.