எரிபொருள் சுவிட்ச் துண்டிக்கப்பட்டதற்கு காரணம் மனித தவறு! ஆமதாபாத் விமான விபத்து குறித்து நிபுணர் விளக்கம்
எரிபொருள் சுவிட்ச் துண்டிக்கப்பட்டதற்கு காரணம் மனித தவறு! ஆமதாபாத் விமான விபத்து குறித்து நிபுணர் விளக்கம்
ADDED : ஜூலை 15, 2025 06:53 AM

புதுடில்லி: குஜராத்தின் ஆமதாபாதில் கடந்த மாதம், 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்குள்ளானதற்கு, இன்ஜின்களுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், அது மனித தவறால் நடந்திருக்கலாம் என்றும், விசாரணை அறிக்கை அதிக வெளிப்படைத் தன்மையுடன் இருந்திருக்கலாம் என்றும், விமான போக்குவரத்து நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு, இரண்டு விமானிகள், 10 பணியாளர்கள், 230 பயணியர் என, மொத்தம் 242 பேருடன், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான, 'போயிங் 787 - 8 ட்ரீம்லைனர்' இரட்டை இன்ஜின்கள் உடைய விமானம், ஜூன் 12ல் புறப்பட்டது.
கருப்பு பெட்டி
கிட்டத்தட்ட 600 - 800 அடி உயரம் மட்டுமே பறந்த விமானம், சில நொடிகளிலேயே, அருகே உள்ள மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த ஒரேயொரு பயணி தவிர, 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உலகையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்துகளை விசாரிக்கும் புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவான தரவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், 15 பக்கங்கள் அடங்கிய முதற்கட்ட விசாரணை அறிக்கையை, மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தனர்.
அதில், 'விமானத்தின் இன்ஜின் 1 மற்றும் இன்ஜின் 2க்கான எரிபொருள், ஒரு வினாடியில் அடுத்தடுத்து துண்டிக்கப்பட்டது.
'இதனால், விமானிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. 'காக்பிட்' எனப்படும் விமானிகள் அறையில், 'எரிபொருளை ஏன் கட் -ஆப் செய்தீர்கள்?' என, ஒரு விமானி மற்றொரு விமானியிடம் கேட்பது பதிவாகி உள்ளது.
'அதற்கு அவர், 'நான் கட் ஆப் செய்யவில்லை' என, பதில் அளிக்கிறார். எனினும், இந்த கேள்வியை யார் கேட்டது என்பது தெரியவில்லை. விபத்துக்கு முன், விமானத்தின் எரிபொருள் சுவிட்சுகள் துண்டிக்கப்பட்டிருந்தன' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, விமானியின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாகவும், தற்கொலை செய்வதற்காக, வேண்டுமென்றே எரிபொருள் சுவிட்சை விமானி ஒருவர், 'ஆப்' செய்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு, இந்திய வணிக விமானிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
விசாரணை அறிக்கை
இந்நிலையில், ஏ.ஏ.ஐ.பி., அறிக்கை தொடர்பாக, விமான போக்குவரத்து நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் நேற்று கூறியதாவது:
விமானத்தின் இரண்டு இன்ஜின்களுக்கான எரிபொருளும் ஒரு வினாடியில் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார கோளாறு காரணமாக எரிபொருள் சுவிட்சுகள் தானாக நகராது.
சுவிட்ச் அடிப்பகுதியில் உள்ள ஸ்பிரிங்கை இழுத்த பின்னரே, 'ரன்' அல்லது 'கட் ஆப்' நிலைக்கு நகர்த்த முடியும். எரிபொருள் துண்டிக்கப்பட்டதற்கு மனித தவறே காரணம். மேலும், விமானிகள் அறையில் பதிவான குரல்கள் தொடர்பாக விசாரணை அறிக்கையில் தெளிவு இல்லை.
விமானத்தில் இயந்திர சிக்கல்கள் அல்லது மென்பொருள் சிக்கல் இருந்தால், அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும்.
அப்படி எதுவும் வரவில்லை. இதன்படி, இயந்திர அல்லது மென்பொருள் சிக்கல் இல்லை என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
ஏ.ஏ.ஐ.பி., விசாரணை அறிக்கையில் அதிக வெளிப்படைத்தன்மை இருந்திருக்க வேண்டும். மேலும், பல்வேறு கேள்விகளுக்கு முறையான விளக்கங்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.