ADDED : ஜன 11, 2025 11:12 PM

மூணாறு:ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் பிரதமராக, 2010ல் இருந்து பதவி வகிப்பவர் விக்டர் ஓர்பன், 61.
இவர் தற்போது, கேரளாவில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மனைவி, இரண்டு மகள்கள், ஐந்து அதிகாரிகள் கொண்ட குழுவுடன், ஜன., 3ல் வந்தார்.
ஆலப்புழா, குமரகம், அதிரப்பள்ளி, வாழச்சால், கொச்சி, தேக்கடி ஆகிய சுற்றுலா பகுதிகளை பார்வையிட்ட பின், நாளை மூணாறுக்கு வருகிறார்.
மூணாறு அருகே விரிபாறை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரண்டு நாட்கள் தங்குகிறார். மூணாறில் தேயிலை தொழிற்சாலை, தேயிலை அருங்காட்சியகம் உட்பட, முக்கிய சுற்றுலா பகுதிகளை பார்க்க உள்ளார்.
கடந்த ஆண்டு இவருக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைக்காகவே தற்போது கேரளா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுலா வரவில்லை
இதை திட்டவட்டமாக மறுத்த ஓர்பன், தன் நாட்டு பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இரண்டு விஷயங்களுக்காக இங்கு வந்துள்ளேன். ஒன்று பழைய விவகாரங்கள்; இன்னொன்று எதிர்கால திட்டங்கள்.
பயண ஆராய்ச்சியாளர் வாஸ்கோடகாமா பற்றி சிறு வயதில் நிறைய கட்டுரைகள் படித்து, ஈர்க்கப்பட்டு, அவரின் வாழ்வியல் முறையை பின்பற்றுகிறேன். அவர், கொச்சியில் தன் கடைசி நாட்களை செலவிட்டதாக அறிந்து, கொச்சிக்கு சென்று வந்தேன்.
இந்தியாவின் பழமை வாய்ந்த கலாசாரங்கள், ஆன்மிக விஷயங்கள், சிறந்த படிப்பு மற்றும் அறிவியல் ரீதியான விவகாரங்கள் குறித்து, ஹங்கேரி மக்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு.
இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைய உள்ளதை அறிந்ததாலும், இங்கு வந்துள்ளேன்.
மற்ற நாடுகளுடனான வெளியுறவு கொள்கை விவகாரத்தில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் வரை, அமைதியான சூழல் நிலவும்; அதற்குப் பிறகு தான் நிறைய வேலை இருக்கிறது.
இவ்வாறு அவர் பேட்டி அளித்துள்ளார்.
இம்மாதம் 16ம் தேதி, இந்தியாவிலிருந்து கிளம்ப திட்டமிட்டுஉள்ளார்.
வெளிநாட்டு பிரதமர் ஒருவர் மூணாறுக்கு வருவது இதுவே முதல்முறை என்றாலும், ஓர்பன் 2013ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, 100 அதிகாரிகளுடன் இந்தியா வந்திருந்தார்.