துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை
துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை
UPDATED : ஏப் 24, 2025 03:41 AM
ADDED : ஏப் 24, 2025 03:39 AM

புதுடில்லி: சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் மோடி, விமான நிலையத்திலேயே, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் இல்லத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பயங்கரவாதிகளை வேட்டையாடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுலா தலமான 'மினி சுவிட்சர்லாந்து' எனப்படும் பசுமை பள்ளத்தாக்குகள் நிறைந்த பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நடவடிக்கைகள்
இதையடுத்து, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா சென்றிருந்த நம் பிரதமர் மோடி, தன் பயணத்தை ரத்து செய்து விட்டு, நாடு திரும்பினார். சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து நேற்று காலை அவர், டில்லி விமான நிலையம் வந்தார்.
உடனடியாக, விமான நிலையத்திலேயே, காஷ்மீர் நிலைமை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அதில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீநகர் சென்றார்.
உடனடியாக, ராணுவம், துணை ராணுவம், உளவுத்துறை, காஷ்மீர் போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது, பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து ஜம்மு -- காஷ்மீர் டி.ஜி.பி., நளின் பிரபாத், விளக்கினார்.
இந்நிலையில், தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் காஷ்மீர் சென்றனர்.
என்.ஐ.ஏ., அமைப்பின் ஐ.ஜி., தலைமையிலான குழு ஒன்று ஸ்ரீநகரில் இருந்து நேற்று பஹல்காம் சென்றது. பஹல்காமில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள், ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, அவர்களுக்கு அமித் ஷா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களையும் மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்தார். அப்போது, 'குற்றவாளிகள் ஒருவரைக் கூட தப்பிக்க விட மாட்டோம்,' என அவர்களிடம் அமித் ஷா உறுதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து, தாக்குதல் நடந்த, பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளி பகுதிகளையும் அமித்ஷா நேற்று பார்வையிட்டார்.
தப்பிக்க முடியாது
பின்னர், சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர், 'பயங்கரவாதத்துக்கு பாரதம் ஒருபோதும் அடிபணியாது. இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருவர்கூட, தப்பிக்க முடியாது என உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இந்த நாட்டுக்கும் நான் உறுதியளிக்கிறேன்.
'பஹல்காமில், தங்கள் அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தவர்களின் வேதனையை ஒவ்வொரு இந்தியர்களும் உணர்கின்றனர்; அதை வார்த்தைகளால் கூற முடியாது' என குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக ஜம்மு -- காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று அறிவித்தார்.
படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ராணுவ விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று மாலை நடந்தது.
அதில், அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்புக்கும், அவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்களுக்கும் விரைவில் தக்க பதிலடி தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.