அறிவுரை கூறிய மனைவி கொலை நாடகமாடிய ஊதாரி கணவர் கைது
அறிவுரை கூறிய மனைவி கொலை நாடகமாடிய ஊதாரி கணவர் கைது
ADDED : பிப் 08, 2025 09:19 PM
சித்ரதுர்கா: பணத்தை வீணாக செலவிட வேண்டாம்' என, அறிவுரை கூறிய மனைவியை கணவர் கொலசெய்தார். அவர் கைது செய்யப்பட்டார்.
சித்ரதுர்காவின் மேதஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் உமாபதி, 45. இவரது மனைவி ஸ்ரீதேவி, 38. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். உமாபதி பணத்தை தண்டமாக செலவு செய்யும் பழக்கம் உள்ளவர். இதை சுட்டிக்காட்டி, கணவரை ஸ்ரீதேவி கண்டித்தார். ஆனால் அவர் மாறவில்லை.
இதே காரணத்தால் தம்பதிக்கிடையே, அவ்வப்போது சண்டை நடந்தது. சமீபத்தில் தன் நிலத்தின் ஒரு பகுதியை உமாபதி விற்றார். அந்த பணத்தையும் மனம் போனபடி செலவிட்டார்.
இதை கண்டு வெறுப்படைந்த ஸ்ரீதேவி, “பணத்தை இப்படி வீணாக்காதீர்கள். மிச்சமுள்ள நிலத்தையாவது, என் பெயரிலும், மகள் பெயரிலும் எழுதி வையுங்கள்,” என, பிடிவாதம் பிடித்தார். இதற்கு உமாபதி சம்மதிக்கவில்லை.
இந்த விஷயமாக, நேற்று முன் தினம் காலையும் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. அதன்பின் ஸ்ரீதேவி, பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது உமாபதி, சேலையால் ஸ்ரீதேவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
'போலீசாரிடம் சிக்கக் கூடாது' என, நினைத்து பெருங்குரலில் கூச்சலிட்டு, அக்கம், பக்கத்தினரை வரவழைத்தார். 'என் மனைவி பூஜை செய்யும்போது, கீழே விழுந்து மயக்கமாகிவிட்டார்' என, அழுது நாடகமாடினார்.
அவர்கள் உதவியுடன் மனைவியை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக கூறினர்.
ஸ்ரீதேவியின் சகோதரர் ரங்கசாமிக்கு, உமாபதியின் செய்கையில் சந்தேகம் ஏற்பட்டது. சித்ரதுர்கா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
உமாபதியை நேற்று போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்தனர்.