ADDED : ஏப் 23, 2025 03:51 AM

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில், 10வது மனைவியுடன் வாழ்ந்த கணவர், தகராறு ஒன்றில் அவரை அடித்து கொலை செய்ததால், நேற்று கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் மாவட்டம், சுலேஷா கிராமத்தின் ஆற்றின் கரையோரம் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக சமீபத்தில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அந்த பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டிருப்பது தெரிந்தது. அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த வசந்தி என்பது தெரிந்தது. அவர் கொல்லப்பட்டது தொடர்பாக கணவர் துலு ராமை, 45, பிடித்து போலீசார் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இது குறித்து போலீசார் கூறியதாவது: துலு ராமுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 10 பேருடன் திருமணமாகி உள்ளது. கொல்லப்பட்டவர் அவரது 10வது மனைவி. கூலி வேலை செய்து வரும் துலு ராம், குடித்துவிட்டு மோசமாக நடந்துகொள்வதால் எட்டு மனைவியர், அவரிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டனர். ஒருவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
இந்நிலையில் 10வது மனைவியான வசந்தியுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 17ம் தேதி இருவரும் இணைந்து உறவினர் திருமணத்திற்கு சென்றனர். திருமண வீட்டில் இருந்து முன்பே வசந்தி கிளம்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்து பார்த்த போது, வசந்தியை காணவில்லை. வீட்டில் இருந்த பொருட்களை அவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. மனைவியை தேடிச் சென்ற துலு ராம், அருகில் உள்ள ஆற்றின் கரை அருகே அவரை கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினார்.
வசந்தியும், தன்னை விட்டு ஓடிவிடுவார் என பயந்த அவர், வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கி வசந்தியை கொன்றுள்ளார்.
அவர் உடல் மீது தழைகளை போட்டு மறைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். சில நாட்களில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசவே இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்வாறு போலீசார் கூறினர்.

