ADDED : பிப் 20, 2025 10:30 PM
கோகல்புரி: வடகிழக்கு டில்லியில் மனைவியைக் கொன்றதற்காக கணவர் கைது செய்யப்பட்டார்.
ஜோஹ்ரிபூர் புலியா பகுதியில் ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 17ம் தேதி காலை 9:10 மணி அளவில் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சாலையில் ரத்தக் கறைகளை கண்டனர்.
காயமடைந்து பாதிக்கப்பட்ட 27 வயது பெண்ணை சிலர் மீட்டு ஜே.பி.சி., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்தனர்.
அதற்குள் சிகிச்சை பலனின்றி பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். விசாரணையில் அந்த பெண்ணை அவரது கணவரே கத்தியால் குத்தியது தெரியவந்தது.
சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பெண்ணின் கணவரை அடையாளம் கண்டனர்.
கஜூரி காஸ் பகுதியை சேர்ந்த ஹர்ஷ் கோயலை, 34, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
கோயல் மீது தமிழ்நாட்டில் இரண்டு குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

