ADDED : பிப் 06, 2025 11:01 PM
வயாலிகாவல்: பணத்தை இஷ்டத்திற்கு செலவு செய்ததை தட்டிக கேட்டதால், கல்லுாரி பேராசிரியையை கழுத்தை நெரித்து கொன்று, நாடகம் ஆடிய கணவர் கைது செய்யப்பட்டார்.
தாவணகெரேயை சேர்ந்தவர் சரத், 43. இவரது மனைவி சேத்தனா, 42. இவர்கள் இருவரும் 15 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். ஒரு மகள் உள்ளார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் மனைவி, மகளுடன் சரத் வாடகை வீட்டில் வசித்தார். சரத் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். சேத்தனா, தனியார் கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றினார்.
கடந்த 4ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு சேத்தனா, வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். அவரை கணவர், மகள், அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
கட்டிலில் இருந்து துாக்கத்தில் தவறி விழுந்ததால், தலையில் பலத்த காயம் அடைந்து மனைவி இறந்ததாக கணவர் கூறினார். வயாலிகாவல் போலீசார் மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சேத்தனா உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
இதனால் நேற்று முன்தினம் சரத்தை பிடித்து, போலீசார் விசாரித்தனர். மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
சரத் தனது சம்பள பணத்தை இஷ்டத்திற்கு செலவு செய்து வந்து உள்ளார். இதை மனைவி தட்டி கேட்டு உள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையில் சில நாட்களாக பிரச்னை இருந்து வந்து உள்ளது. மனைவி மீது கோபத்தில் இருந்த கணவர், அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
கடந்த 3ம் தேதி பாலில் துாக்க மாத்திரை கலந்து மனைவிக்கு கொடுத்தார். துாக்கத்தில் இருந்த சேத்தனாவை, கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மற்றொரு சம்பவம்
மஹாராஷ்டிராவின், சம்புர்தாரா கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி ஜங்கலே, 40. இவரது மனைவி மீராபாய், 30. இங்குள்ள சிலர் கரும்பு வெட்டும் பணிக்காக, பெலகாவி, கோகாக்கின் உப்பாரட்டி கிராமத்துக்கு வந்தனர். அவர்களுடன் பாலாஜி ஜங்கலேவும், அவரது மனைவியும் வந்திருந்தனர்.
பாலாஜி ஜங்கலே தினமும் மது குடித்துவிட்டு பணிக்கு வந்தார். இது மனைவிக்கு பிடிக்கவில்லை.
கணவரை திட்டினார். நேற்று காலை வழக்கம் போன்று, குடிபோதையில் பணிக்கு வந்ததால், தம்பதிக்கிடையே வாக்குவாதம் நடந்தது.
அப்போது பாலாஜி, பெரிய கல்லை எடுத்து மனைவியின் மண்டையில் ஓங்கி அடித்ததில், அவர் உயிரிழந்தார். கோகாக் போலீசார், பாலாஜி ஜங்கலேவை கைது செய்தனர்.