நண்பருடன் கள்ளத்தொடர்பு? மனைவியை கொன்ற கணவர் கைது!
நண்பருடன் கள்ளத்தொடர்பு? மனைவியை கொன்ற கணவர் கைது!
ADDED : பிப் 05, 2025 09:45 PM

ஆனேக்கல்; நண்பருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தில், மனைவியை ஏழெட்டு முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, ஹெப்பகோடி திருபாளையாவை சேர்ந்த தம்பதி மோகன் ராஜு, 32 - ஸ்ரீகங்கா, 29. இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார். தன் நண்பர் மணிகண்டனுடன், மனைவி ஸ்ரீகங்காவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக மோகன் ராஜு சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இரண்டு, மூன்று ஆண்டுகளாக சண்டை நடந்து வந்துள்ளது.
இதே விஷயம் தொடர்பாக, எட்டு மாதங்களுக்கு முன் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மனைவி, கணவரை விட்டு பிரிந்து, மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மகனை பார்க்க, ஹெப்பகோடியில் உள்ள மனைவியின் வீட்டுக்கு மோகன் ராஜு சென்றார். அப்போது மீண்டும் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபத்துடன் வீட்டுக்கு திரும்பிவிட்டார்.
நேற்று காலை மகனை ஹெப்பகோடியில் உள்ள பள்ளியில் விட ஸ்ரீகங்கா சென்றார். அப்போது பள்ளியின் வாசலில் நின்றிருந்த மோகன் ராஜு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஸ்ரீகங்காவை ஏழெட்டு முறை கத்தியால் குத்தினார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஹெப்பகோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையில், படுகாயம் அடைந்த ஸ்ரீகங்காவை, நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கேயே நின்றிருந்த மோகன் ராஜை கைது செய்து விசாரித்தனர்.
பெங்களூரு ரூரல் எஸ்.பி., பாபா அளித்த பேட்டி: மோகன் ராஜு, அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். அந்த நேரத்தில், அவரது நண்பர் மணிகண்டன், இவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது, ராஜுவுக்கும், ஸ்ரீகங்காவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல நாட்கள் சண்டை நடந்ததால், கணவன் - மனைவி பிரிந்து வசித்து வருகின்றனர். இதனால், கோபத்தில் மனைவியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.