ஷிவமொகா: பொருட்களை கொண்டு செல்ல வந்த மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
ஷிவமொகா, சாகராவின் குதரூர் கிராமத்தில் வசிப்பவர் லோகேஷ், 35. இவரது மனைவி நீலாவதி, 29. தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கு அவ்வப்போது சண்டை நடந்தது. வருத்தமடைந்த மனைவி, ஒரு மாதத்துக்கு முன், குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை, தன் வீட்டுக்கு வரும்படி லோகேஷ் அழைத்தும் வர மறுத்தார். நேற்று முன் தினம் மாலை, தன் பொருட்களை கொண்டு செல்வதற்காக, கணவர் வீட்டுக்கு நீலாவதி வந்திருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த லோகேஷ், மனைவியுடன் தகராறு செய்து ஆயுதங்களால் கடுமையாக தாக்கினார்.
இதில் காயமடைந்த நீலாவதிக்கு, ஆரம்ப சுகாதார மையத்தில், முதலுதவி சிகிச்சையளித்து, கூடுதல் சிகிச்சைக்காக சாகரா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியில் உயிரிழந்தார்.
கார்கல் போலீசார் விசாரிக்கின்றனர். லோகேஷ் கைது செய்யப்பட்டார்.