மனைவியை ஆபாசமாக சித்தரித்த கடன் நிறுவனம்; கணவர் தற்கொலை
மனைவியை ஆபாசமாக சித்தரித்த கடன் நிறுவனம்; கணவர் தற்கொலை
ADDED : டிச 12, 2024 02:36 AM

விசாகப்பட்டினம் : ஆந்திராவில் 2,000 ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்காததை அடுத்து, மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கடன் வழங்கும் நிறுவனம் வெளியிட்டதால், அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நரேந்திரா, 25. மீனவரான இவர், அகிலா என்ற பெண்ணை காதலித்து கடந்த அக்டோபர் 28ல் திருமணம் செய்தார். மோசமான வானிலை காரணமாக மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாததால், நரேந்திராவுக்கு வருமானம் தடைபட்டது.
இதனால், பண நெருக்கடியில் சிக்கித் தவித்த அவர், கடன் செயலி ஒன்றில் தன் அவசர தேவைக்காக 2,000 ரூபாய் கடன் பெற்றார். அதை உரிய நேரத்தில் திருப்பி அளிக்க முடியவில்லை.
இதனால், கடன் அளித்த நிறுவனத்தின் ஏஜன்டுகள் மொபைல் போனில் அழைத்தும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் அழுத்தம் கொடுத்தனர்.
இதற்கிடையே, நரேந்திராவின் மனைவி அகிலாவின் மொபைல் போன் எண்ணிற்கு, அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, கடன் கொடுத்த நிறுவனம் அனுப்பி உள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தன் கணவரிடம் அதை காட்டியுள்ளார். அப்போதுதான், கடன் செயலியில் 2,000 ரூபாய் வாங்கியதை தன் மனைவியிடம் கூறியுள்ளார்.
அதற்குள், அந்த ஆபாச புகைப்படங்களை நரேந்திராவின் உறவினர்கள், நண்பர்களுக்கு கடன் செயலி நிறுவன ஏஜன்டுகள் அனுப்பியுள்ளனர். இதனால், மன வேதனை அடைந்த நரேந்திரா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவில் கடன் செயலி நிறுவனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பேர் தற்கொலை செய்துள்ளனர்.

