ADDED : நவ 06, 2024 02:12 AM
வாரணாசி,
உ.பி.,யில் உள்ள வாரணாசி பதாய்னி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர குப்தா. இவரது இரண்டாவது மனைவி நீது, 45. இந்த தம்பதிக்கு நவனேந்திரா, 25, சுபேந்திர குப்தா, 15, என இரு மகன்களும், கவ்ராங்கி, 16 என்ற மகளும் இருந்தனர்.
நேற்று காலை ராஜேந்திர குப்தாவின் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.
வேலைக்கார பெண் வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு நீது மற்றும் அவரது மகன்கள், மகள் என நான்கு பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர்.
ராஜேந்திர குப்தாவை போலீசார் தேடியபோது, அவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் வீட்டிற்கு வெளியில் உள்ள ஒரு இடத்தில் இறந்து கிடந்தார்.
போலீசார் கூறியதாவது:
குப்தா ஏற்கனவே தன் தந்தை மற்றும் சகோதரர்களை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தீபாவளியையொட்டி ஜாமினில் வந்த குப்தாவின் வீட்டில் சொத்து பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் மகள், இரு மகன்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குப்தா, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுபான வியாபாரியான இவருக்கு, சொந்தமாக 10 வீடுகள் உள்ளன.
இதன் வாயிலாக மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த குப்தாவுக்கும், மனைவி நீதுவுக்கும் அடிக்கடி சண்டை நடந்ததும் விசாரணையில்தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.