ADDED : அக் 18, 2024 07:36 AM
கோனனகுன்டே: மனைவியையும், அவரது கள்ளக்காதலரையும் கொலை செய்த கணவர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவை சேர்ந்தவர் கொல்லபாபு, 41. இவரது மனைவி லட்சுமி, 41. சில ஆண்டுகளுக்கு முன், பிழைப்பு தேடி தம்பதி பெங்களூரு வந்தனர். கட்டுமான பணி செய்து வந்தனர்.
கணேஷ் பாபு, 20, என்பவரும் ஆந்திராவில் இருந்து வந்து, இவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
பெங்களூரு கோனனகுன்டேவின் சோமேஸ்வரா லே -- அவுட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். மூவரும் அங்கேயே தங்கியிருந்தனர்.
லட்சுமிக்கும், கணேஷ் குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக சந்தேகித்த கொல்லபாபு, அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மூவரும் சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர்.
நேற்று அதிகாலை கொல்லபாபுவுக்கு விழிப்பு வந்தது. எழுந்து பார்த்தபோது, மனைவி லட்சுமி, கள்ளக்காதலன் கணேஷ் குமாருடன் நெருக்கமாக இருப்பதை நேரில் பார்த்தார்.
கோபமடைந்த கொல்லபாபு, கைக்கு கிடைத்த கனமான மரக்கட்டையால் மனைவியையும், கணேஷ் குமாரையும் சரமாரியாக அடித்து கொலை செய்தார்.
மனைவியின் தம்பியை மொபைல் போனில் தொடர்பு கொண்ட கொல்லபாபு, 'உன் அக்கா, கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இருவரையும் கொன்று விட்டேன். நானும் தற்கொலை செய்து கொள்கிறேன்' என கூறினார். அதன்பின் அதே கட்டடத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளர்கள் காலையில் பணிக்கு வந்த போது, மூவரும் இறந்து கிடப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கோனனகுன்டே போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.