கணவருக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை : திருமணமான 36வது நாளில் சம்பவம்
கணவருக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை : திருமணமான 36வது நாளில் சம்பவம்
ADDED : ஜூன் 17, 2025 04:45 PM

கர்வா: திருமணமாகி 36 நாட்களில் கணவருக்கு உணவில் பூச்சிகொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்தாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக ரங்கா பகுதி போலீசார் கூறியதாவது:
ஜார்கண்ட் மாநிலம் பஹோகுந்தர் கிராமத்தில் வசிக்கும் புத்நாத் சிங், கடந்த மே 11 ஆம் தேதியன்று சத்தீஸ்கரின் ராம்சந்திரபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஷூன்பூர் கிராமத்தை சேர்ந்த ரகுநாத் சிங்கின் மகள் சுனிதாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு மறுநாள் சுனிதா, தனது பெற்றோர் வீட்டிற்கு செல்லும் போது பிரச்னை தொடங்கியதாக கூறப்படுகிறது. அப்போது சுனிதா, கணவரை பிடிக்கவில்லை என்றும் அவருடன் வாழப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக இருதரப்பு வீட்டாரும் சமாதானம் செய்துள்ளனர். கடந்த ஜூன் 5 ஆம் தேதி இது தொடர்பாக பஞ்சாயத்து நடந்துள்ளது. அதை தொடர்ந்து சுனிதா சமாதானம் அடைந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி, சத்தீஸ்கரில் உள்ள ராமானுஜ்கஞ்ச் சந்தைக்கு தம்பதியர் இருவரும் சென்றனர். அப்போது, விவசாயப் பயன்பாட்டிற்கு பூச்சிக்கொல்லி மருந்து தேவை என்ற போலியான காரணத்தை கூறி, சந்தையில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து வாங்குமாறு சுனிதா, தனது கணவரிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு, சுனிதா தனது கணவருக்கு உணவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். மறுநாள் காலையில் அவர் எழுந்திருக்காத நிலையில் இறந்து கிடந்தார்.
அதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, அறிக்கை கிடைத்த பிறகு இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும்.
சுனிதாவை கைது செய்து காவலில் எடுத்துள்ளோம். பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. அறிக்கை வந்த பிறகு இறப்புக்கான காரணம் எங்களுக்குத் தெரியும். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் இருந்து மற்றொரு கொடூரமான கொலை வழக்கு வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.