அரசு பணிக்காக கணவர் கொலை? மனைவி மீது மாமியார் புகார்!
அரசு பணிக்காக கணவர் கொலை? மனைவி மீது மாமியார் புகார்!
ADDED : பிப் 05, 2025 09:37 PM
சித்ரதுர்கா; அரசு பணி மீதான ஆசையால், கணவரை கொலை செய்ததாக மனைவி மீது மாமியார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கணவர் உடலை தோண்டி எடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சித்ரதுர்காவின், நேரு நகரில் வசித்தவர் சுரேஷ், 46. இவர் மொளகால்மூரு தாலுகா அலுவலகத்தில், 'ஏ குரூப்' ஊழியராக பணியாற்றினார். இவருக்கும், நாகரத்னா, 40, என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
சுரேஷின் தந்தை அரசு பணியில் இருந்தவர். பணியில் இருக்கும் போதே உயிரிழந்தார். கருணை அடிப்படையில் மகன்களுக்கு வேலை அளிக்க, அரசு முன்வந்தது. அப்போது தாய் சரோஜம்மா, தன் இரண்டாவது மகன் சுரேஷுக்கு வேலை தரும்படி கேட்டு கொண்டதால், அவர் தாசில்தார் அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்பட்டார்.
சுரேஷ், தன்னை நன்றாக பார்த்து கொள்வார் என, தாய் நம்பினார். ஆனால் சுரேஷ், தன் மனைவியின் நெருக்கடியால், தன் தாய் மற்றும் அண்ணனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். இதற்கிடையில், கணவரையும் நாகரத்னா நன்றாக பார்த்து கொள்ளவில்லை. அவரும், அவரது குடும்பத்தினரும் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட சுரேஷ், 2024 அக்டோபரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே மாதம் 8ம் தேதி உயிரிழந்தார். ஆனால், கணவர் இறந்த விஷயத்தை நாகரத்னா, மாமியார் வீட்டுக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்குகளை முடித்துள்ளார். கணவர் மஞ்சள் காமாலையால் இறந்ததாக, அக்கம், பக்கத்தினரிடம் நாகரத்னா கூறியுள்ளார்.
தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த சரோஜம்மா, 'என் மகன் சுரேஷ், மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை. அரசு பணி தனக்கு கிடைக்க வேண்டும் என, நாகரத்னா, கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்' என, மொளகால்மூரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், போலீசார் புகாரை அலட்சியப்படுத்தினர். எனவே சரோஜம்மா, லோக் ஆயுக்தாவில் புகார் அளித்து, நியாயம் கேட்டார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், சுரேஷ் தன் தாய்க்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், 'நான் இறந்தால் அதற்கு என் மனைவியே காரணம்' என, கூறியுள்ளார். இந்த தகவலையும் லோக் ஆயுக்தாவிடம் சரோஜம்மா தெரிவித்தார்.
இதை தீவிரமாக கருதிய உப லோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா, புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், சுரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி போலீசார் நேற்று முன்தினம், சித்ரதுர்கா தாசில்தார் நாகமணி முன்னிலையில், சுரேஷின் உடலை தோண்டி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பினர்.