தேனிலவுக்கு அழைத்து சென்று கணவர் கொலை; கூலிப்படையை வைத்து தீர்த்து கட்டிய மனைவி
தேனிலவுக்கு அழைத்து சென்று கணவர் கொலை; கூலிப்படையை வைத்து தீர்த்து கட்டிய மனைவி
UPDATED : ஜூன் 10, 2025 12:35 AM
ADDED : ஜூன் 10, 2025 12:34 AM

ஷில்லாங் : மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது, கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, 30. இவருக்கும், சோனம், 24, என்பவருக்கும், கடந்த மாதம் 10ம் தேதி திருமணம் நடந்தது. இதைஅடுத்து, இருவரும் தேனிலவுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயா சென்றனர்.
சிரபுஞ்சி
அங்கு, கிழக்கு மாவட்டத்தில் உள்ள தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சி பகுதிக்கு சென்றனர். நான்க்ரியாட் கிராமத்தில், விடுதி ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கினர்.
கடந்த மாதம் 23ம் தேதி, விடுதியில் இருந்து ஸ்கூட்டரில் வெளியே சென்றவர்கள் அறைக்கு திரும்பவில்லை. இருவரது மொபைல் போன்களும் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததால் கவலை அடைந்த ராஜாவின் உறவினர்கள், இது குறித்து மத்திய பிரதேச போலீசில் புகாரளித்தனர்.
அவர்களும் மேகாலயாவில் உள்ள போலீசாரிடம் விசாரித்தனர். தேனிலவுக்கு சென்ற தம்பதி மாயமானதை அடுத்து, அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
ஷில்லாங்கில் இருந்து 60 கி.மீ., தொலைவில், அவர்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஸ்கூட்டர் நின்றிருந்தது கடந்த மாதம் 24ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சோஹ்ரா பகுதியில் குப்பைக் கொட்டும் 200 அடி பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் பாதி சிதைந்த நிலையில் கடந்த 2ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
ராஜாவைக் கொன்றுவிட்டு மர்மநபர்கள், சோனமை கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
ராஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கூர்மையான ஆயுதத்தால் அவர் குத்தி கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், ராஜா மற்றும் சோனம் இருவரையும் பார்த்ததாக கூறிய வழிகாட்டி ஒருவர், அவர்களுடன் மேலும் மூன்று ஆண்கள் சென்றதை கண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
திருப்புமுனை
அவர்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டு சென்றதால், என்ன பேசினர் என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு விஷயங்களும் வழக்கில், புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தர பிரதேசம் காஜிப்பூர் வந்த சோனம், ராஜாவை கொலை செய்ததாக கூறி போலீசில் நேற்று முன்தினம் இரவு சரணடைந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை வரவழைத்து ராஜாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவரை கைது செய்ய மேகாலயா போலீசார் உத்தர பிரதேசம் விரைந்தனர்.
சோனம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கொலை சம்பவத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து மேகாலயா டி.ஜி.பி., இடாஷிஷா நோங்ராங் நேற்று கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் தன் தந்தையின் கடையில் பணிபுரிந்த ராஜ் குஷ்வாஹாவுடன் சோனமுக்கு பழக்கம் ஏற்பட்டது.
''இதனால், திருமணம் வேண்டாம் என கூறி வந்த அவருக்கு, அவரது பெற்றோர் ராஜாவுடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர்.
“அது பிடிக்காததால், காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி, ராஜாவை சோனம் கொலை செய்தார்.
''இந்த விவகாரத்தில் சோனம், ராஜ் குஷ்வாஹா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோனமிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல விபரங்கள் தெரியவரும்,” என்றார்.
![]() |