ADDED : ஜன 29, 2025 01:38 AM
ஹர்டோய்,உத்தர பிரதேசத்தில் யானைக்கால் நோயால் அவதிப்பட்ட கணவர், தன் நோய் குணமடைவதற்காக மனைவியை நரபலி கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியை சேர்ந்தவர் கம்லேஷ். திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், யானைக்கால் நோயால் அவதிப்பட்ட கம்லேஷ், தீவிர சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. கடந்த 2020ம் ஆண்டில் கமலேஷின் மாமனார், தன் மகளை, கம்லேஷ் நரபலி கொடுத்து கொன்றுவிட்டதாக, போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு, மாவட்ட கூடுதல் நீதிபதி அச்சே லால் சரோஜ் முன் நடந்தது.
விசாரணையில், யானைக்கால் நோய் குணமாக வேண்டி, பன்றி உள்ளிட்ட விலங்குகளை கம்லேஷ் ஏற்கனவே நரபலி கொடுத்தது தெரியவந்தது. நோய் குணமாகாத நிலையில், மனைவியையும் கம்லேஷ் நரபலி கொடுத்துள்ளார்.
இதையடுத்து  நீதிபதி சரோஜ் அளித்த தீர்ப்பு:
மனைவியை கணவர் கம்லேஷ் நரபலி கொடுத்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது. எனவே கம்லேசுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கிறது.
மேலும் அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

