ADDED : மார் 20, 2025 12:46 AM

தாவணகெரே: தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா தாலுகாவின் ஹரலாலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நேத்ராவதி, 26. இவரது கணவர் தேவேந்திரப்பா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை தங்கையை பார்க்க, அவரது அண்ணன் புட்டப்பா வந்தார். வீட்டில் தங்கையை தவிர மற்றவர்கள் இருந்தனர். வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது, நேத்ராவதி இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த புட்டப்பா, மலேபென்னுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசில் புட்டப்பா அளித்த புகாரில், 'ஏழு ஆண்டுகளுக்கு முன் தேவேந்திரப்பாவுடன் என் தங்கைக்கு திருமணம் நடந்தது. என் தங்கையுடன் தேவேந்திரப்பா பலமுறை சண்டை போட்டுள்ளார். பெரியவர்கள் பேசி, சமாதானம் செய்தனர். இம்முறை அவரை கொலை செய்துள்ளார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவேந்திரப்பாவை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.