ADDED : நவ 22, 2024 12:58 AM
ஆக்ரா, உத்தர பிரதேசத்தில் நண்பரை வைத்து மனைவியை பலாத்காரம் செய்த வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்கு, 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள சீதா நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான இளம்பெண், தன் கணவர் மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரது கணவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
கணவர், மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே வீட்டுக்கு வருவார். கடந்த செப்டம்பரில், அச்னேரா பகுதியில் வசிக்கும் தன் நண்பருடன் வீட்டிற்கு வந்த கணவர், மனைவிக்கு மயக்க மருந்து கலந்த உணவுப் பொருட்களை தந்ததாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட பின் மயங்கிய அவரை, கணவரின் நண்பர் பலாத்காரம் செய்துள்ளார். இதை, கணவர் வீடியோவாக பதிவு செய்தார்.
பின், வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற அவர், மனைவியிடம் 2 லட்சம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். பணத்தை தராவிட்டால், நண்பர் பலாத்காரம் செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண்ணின் கணவரையும், அவரது நண்பரையும் கைது செய்தனர்.