மனைவிகளுக்கு பதில் கவுன்சிலர்களாக பதவியேற்ற கணவர்கள்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கேலிக்கூத்து!
மனைவிகளுக்கு பதில் கவுன்சிலர்களாக பதவியேற்ற கணவர்கள்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கேலிக்கூத்து!
ADDED : மார் 05, 2025 01:21 PM

ராய்ப்பூர்; சத்தீஸ்கரில் மனைவிமார்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
சத்தீஸ்கரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கபிர்தாம் மாவட்டத்தில் பரஸ்வாரா கிராம பஞ்சாயத்தில் 11 வார்டுகளில் 6 பெண்கள் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கான பதவி ஏற்பு விழா நடந்தது. ஆனால் விழாவின் போது வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களின் கணவன்மார்கள் பதவியேற்றுள்ளனர். பஞ்சாயத்து செயலாளர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
கணவன்மார்கள் பதவியேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து கபிர்தாம் மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி அஜய் திரிபாதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறி உள்ளார்.