ADDED : மே 21, 2026 01:41 AM
நொய்டா: கிரேட்டர் நொய்டாவில், கூடுதல் வரதட்சணை கேட்டு, 24 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவரின் தாய் மற்றும் மாமா ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
நொய்டா அருகே, ஜல்புரா கிராமத்தில் வசித்தவர், தீபிகா நாகர், 24. வரதட்சணை கொடுமையால், கடந்த, 17ம் தேதி, வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், தீபிகாவின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில், 'கூடுதல் வரதட்சனை கேட்டு தீபிகாவை கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்து விட்டனர்' என, குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீபிகாவின் கணவர் ஹிருத்திக் மற்றும் அவரது தந்தை மனோஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில், ஹிருத்திக்கின் தாய் பூனம் மற்றும் மாமா வினோத் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.
