தலையில் மீண்டும் முடி வளர வைக்கும் அதிசய களிம்பு: பல நுாறு பேரை ஏமாற்றியவர் 'எஸ்கேப்'
தலையில் மீண்டும் முடி வளர வைக்கும் அதிசய களிம்பு: பல நுாறு பேரை ஏமாற்றியவர் 'எஸ்கேப்'
ADDED : ஏப் 12, 2025 12:41 PM

ஹைதராபாத்: 'தலையில் மீண்டும் முடி வளர வைக்கிறேன்' என்ற ஹைதராபாத் சலூன் கடைக்காரர் கூறிய பொய்யை நம்பி, அவர் கொடுத்த களிம்பை தடவிய பலர், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சலுான் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாம் அழகாய் இருக்க வேண்டும் என்று விரும்பாத மனிதர்களே கிடையாது. அதிலும் தலைமுடி அழகாகவும், பார்ப்போரை வசீகரிக்க வேண்டும் என்று ஆண்களும், பெண்களும் விரும்புவது இயல்பான ஒன்று. குறிப்பாக முடி உதிர்ந்து வழுக்கையான தலையில் மீண்டும் முடி வளருமா என்று தினமும் ஏங்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அவர்களை ஆசை மற்றும் எண்ணத்தை மூலதனமாக்கிய போலி சலூன்காரரின் மோசடி களிம்பால் பலரும் இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
ஹைதராபாதின் சந்துலால் என்ற பகுதியில் வகில் சல்மானி என்பவர் முடி திருத்தகம் ஒன்றை வைத்துள்ளார். தாம் டில்லியில் இருந்து வந்தவர், அழகுக்கலையில் அத்துணை வித்தைகளையும் கற்றவர் என்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூறி இருக்கிறார்.
அப்படியே, தோசையில் ஊற்றப்படும் நெய் போல, என்னிடம் ஒரு களிம்பு இருக்கிறது. இதை நான் தான் கண்டுபிடித்தேன். இந்த களிம்பை தலையில் தடவினால் அமேசான் காடுகளே தோற்று போகும் அளவுக்கு வெளிச்சமே வராதபடி தலையில் அடர்த்தியாக முடி வளரும் என்று கலர்,கலராக கதை, திரைக்கதை, வசனத்தை வாடிக்கையாளர்களிடம் விட்டுள்ளார்.
தங்கள் தலையில் மீண்டும் முடி வளராதா என்று ஏங்கி தவித்த பலரும், தங்களை காப்பாற்ற வந்த ரட்சகன் என்று வகில் சல்மானியை எண்ணினர். பொய்யாக இருக்குமோ, இல்லை, இல்லை முயற்சித்துதான் பார்ப்போமே என்று தலையில் முடி கொட்டிய பலரும் வகில் சல்மானி கடை முன்பு குவிய ஆரம்பித்தனர்.
கடைக்கு வந்தவர்களின் தலையில் உள்ள முடியை மழித்து விட்டு, பின்னர் மொட்டை தலையில் தாம் கண்டுபிடித்த அரியவகை களிம்பை தடவி அனுப்பி வைத்து இருக்கிறார்.
கூடவே தலையில் 3 நாட்களுக்கு சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட எதையும் தேய்க்கக் கூடாது என்று அட்வைசும் பண்ணி இருக்கிறார்.
இவரின் களிம்பான (கனிவான) பேச்சு வசீகரிக்க, தினமும் இவரது கடை முன்பு ரயில் டிக்கெட்டுக்கு காத்திருப்போரை போல நூற்றுக்கணக்கானோர் காத்திருக்க ஆரம்பித்தனர். ஒருவரையும் விடாமல் தலையை மொட்டையடித்து, வெள்ளை களிம்பை தடவி இனி எல்லாம் ஜெயமே என்று கூறி அனுப்பி உள்ளார்.
வகில் சல்மானி பற்றி அண்டை நகரங்களிலும் இருந்தும் ஏராளமானோர் குவிய ஆரம்பித்தனர். கணக்கிலடங்காத வகையில் கல்லாவும் நிரம்ப ஆரம்பித்தது. கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் அங்கு குவியத் தொடங்கினர். கூட்டம், கூட்டமாக தலையில் முடி கொட்டியவர்கள் வரிசையில் நிற்க, ஏற்கனவே களிம்பு தடவி வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களால் சல்மானிக்கு பிரச்னை உண்டானது.
தலையில் களிம்பு தடவியவர்கள் பலருக்கு இடைவிடாத தலைவலி, சளி என உடல்நல கோளாறுகள் ஏற்பட ஆரம்பித்தன. அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைகளுக்கு ஓட ஆரம்பித்து இருக்கின்றனர். இதை மெல்ல மோப்பம் பிடித்த வகில் சல்மானி, நைசாக கடையை பூட்டிவிட்டு காணாமல் போய்விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மாயமான வகில் சல்மானியை தேடி வருகின்றனர். அவர் பயன்படுத்திய வெள்ளை களிம்பை மாதிரி எடுத்த அவர்கள், இதில் ஏதேனும் உடலை பாதிக்கும் நச்சுப் பொருட்கள் கலக்கப்பட்டு உள்ளனவா என்பதை அறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனின் ஆசையை தூண்டிவிட்டால் போதும் என்ற சினிமா வசனத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது எனலாம்.

