ADDED : ஜன 07, 2024 02:30 AM

பெங்களூரு : “முன்னாள் பிரதமர் தேவகவுடா சாபத்தை வரமாக ஏற்றுக் கொள்கிறேன். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்,” என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் சித்தராமையா குறிப்பிட்டு உள்ளதாவது:
எனது மற்றும் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கணித்துள்ளார். அவரின் சாபத்தை வரமாக ஏற்றுக் கொள்கிறேன். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்.
அரசியல் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், பெரியவர்கள் ஆசீர்வதிக்க வேண்டும். இளையவர்களை சபிக்கக் கூடாது.
பல ஆண்டுகளாக மதச்சார்பின்மை கிரீடத்தை அணிந்திருந்த தேவகவுடா, பொருளாதார மந்தநிலையின்போது, அதை துாக்கி எறிந்துவிட்டு, வகுப்புவாதத்தின் கிரீடத்தை அணிந்துள்ளார்.
விரக்தியில் அத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் கூறியது தவறு என்பதை அவர் உணர்ந்தால், அவர் கூறியதை வாபஸ் பெறலாம்.
'சங்க்' பிழையின் விளைவு, தேவகவுடா இப்படி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவுக்கு வராது என நம்புகிறேன். அதுபோன்று தேவகவுடாவும் நீண்ட நாட்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.
ஆனால் ம.ஜ.த., மற்றும் அவர்களின் புதிய கூட்டணி கட்சியான பா.ஜ., என்றென்றும் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்த ஆசையை நிறைவேற்ற எங்கள் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்.
ம.ஜ.த.,வை, பா.ஜ.,வின் 'பி டீம்' என்று கடந்த காலத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். எனது கருத்தை ஏற்று, அவர்களின் சித்தாந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதற்காக ம.ஜ.த.,வுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதச்சார்பின்மை மற்றும் நல்லிணக்கத்தின் பாரம்பரியத்தை கொண்ட கர்நாடக வாக்காளர்கள் அடுத்த தேர்தலில் சரியான தேர்வு செய்வர் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.