எனக்கும் முதல்வர் பதவி வேணும்: மவுனம் கலைத்தார் அஜித்பவார்!
எனக்கும் முதல்வர் பதவி வேணும்: மவுனம் கலைத்தார் அஜித்பவார்!
UPDATED : செப் 17, 2024 06:39 PM
ADDED : செப் 17, 2024 06:28 PM

புனே: 'எனக்கும் முதல்வர் பதவி வேண்டும்,' என மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கோரியது, கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இந்த கூட்டணி, பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது. இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராகும் நோக்கத்தில் தொகுதி பங்கீடு பற்றி மூன்று கட்சிகளும் பேசி வருகின்றன. மூன்று கட்சி நிர்வாகிகளும் சுமுகமாக பேசி முடித்து விட்டதாகவும், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.ஆனால், தேர்தலுக்கு பின் யார் முதல்வராக வருவார் என்பதைப்பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், 'பா.ஜ., பார்லிமென்டரி குழு தான் அதற்கான முடிவை எடுக்கும்' என்று, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், தனக்கும் முதல்வர் பதவி மீது ஒரு கண் இருப்பதை துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார் வெளிப்படுத்தியுள்ளார்.
புனேயில் அவர் கூறியதாவது: ஒவ்வொரு கட்சியிலும் தொண்டர்கள் தங்கள் தலைவர் தான் முதல்வராக வேண்டும் என்பார்கள். நானும் முதல்வர் ஆக வேண்டும் என்கிறேன். ஆனால், முதல்வர் ஆக வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் வாழ்த்தினால் போதாது, அதற்கு பெரும்பான்மை வேண்டும்.வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் யாரை முதல்வராக்க வேண்டும் என கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி முடிவு எடுக்க வேண்டும். எனினும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒற்றுமையுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம்.இவ்வாறு அஜீத் பவார் கூறினார்.இதேபோல, முதல்வர் பதவியை தக்க வைக்க, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் தீவிரமாக உள்ளது. தாங்கள் இழந்த முதல்வர் பதவியை எப்படியும் கைப்பற்றி விடுவது என்று பா.ஜ., கட்சியினரும் தீவிரமாக உள்ளனர். இதனால் பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், யாருக்கு முதல்வர் பதவி என்பதில் சிக்கல் எழும் சூழல் ஏற்பட்டுள்ளது.