ADDED : ஜன 30, 2024 07:57 AM
ஹாவேரி, : ''நான் அரசியல் சன்னியாசி அல்ல. கட்சி முடிவு செய்தால், மத்திய அரசியலுக்கு செல்வேன்,'' என பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார்.
ஹாவேரியில் நேற்று அவர் கூறியதாவது:
ஹாவேரி லோக்சபா தொகுதியில், யார் வேட்பாளர் என்பதை, பா.ஜ., மேலிடம் முடிவு செய்யும். ஏற்கனவே தொகுதியில் ஆய்வு நடக்கிறது. ஆய்வறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
மேலிடம் யாருக்கு சீட் கொடுத்தாலும், அவருக்காக பணியாற்றுவோம். பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைப்பதில், நாங்கள் கைகோர்ப்போம். நான் அரசியல் சன்னியாசி அல்ல. கட்சி முடிவு செய்தால், மத்திய அரசியலுக்கு செல்வேன்.
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மீண்டும் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். ராகு காலம் என, கூறுவார்களே, அதுபோன்று கெட்ட நேரத்தில் அவருக்கு அநியாயம் ஏற்பட்டுவிட்டது. இதை சரி செய்வதாக உறுதியளித்து, அவரை மேலிட தலைவர்கள் கட்சிக்கு அழைத்து வந்துள்ளனர். ஷெட்டர் அனுபவம் மிக்க அரசியல்வாதி. அவர் வந்ததால், பா.ஜ.,வின் சக்தி அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.