!நான் நாஸ்திகன் அல்ல, ஆஸ்திகன் என முதல்வர் ஒப்புதல்: சொந்த ஊரில் ராமர் கோவில் கட்டியதாக பெருமிதம்
!நான் நாஸ்திகன் அல்ல, ஆஸ்திகன் என முதல்வர் ஒப்புதல்: சொந்த ஊரில் ராமர் கோவில் கட்டியதாக பெருமிதம்
ADDED : ஜன 23, 2024 05:43 AM

பெங்களூரு: ''நான் நாஸ்திகன் அல்ல, ஆஸ்திகன். எங்கள் ஊரில் ராமர் கோவில் கட்டி கொடுத்தேன். மனிதாபிமானமற்ற செயல்களை செய்து நாடகமாக வழிபாடு செய்தால், நம் வழிபாட்டை கடவுள் ஏற்கமாட்டார்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பு வந்தும், காங்கிரஸ் தலைவர்கள் செல்லாமல் புறக்கணித்தனர். அதற்கு விளக்கமும் சொல்லி வந்தனர்.
இதற்கிடையில், 'திறப்பு விழா அன்றே செல்ல வேண்டும் என்பதில்லை. அதன்பின், கண்டிப்பாக அயோத்திக்கு செல்வோம்' என, சில நாட்களுக்கு முன் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
ராமர் கோவில் திறப்பு
மேலும், பா.ஜ., தரப்பில் விடுமுறை அளிக்க கோரியும், முடியாது என முதல்வர் கைவிரித்து விட்டார். இதற்கிடையில், கர்நாடகாவில் நேற்று ராமர் கோவில் திறப்பு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதால், மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடும்படி உத்தரவிட்டிருந்தார்.
இதன்படியே, பாதுகாப்பு போடப்பட்டு, உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் பக்தர்கள் நேற்று ராமர் கோவில் திறப்பை கோலாகலமாக கொண்டாடினர்.
அந்த வகையில், பெங்களூரு மஹாதேவபுரா சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பிதரஹள்ளி அடுத்த ஹிரண்டஹள்ளியில், புதிதாக கட்டப்பட்ட ராமர், சீதை, லட்சுமண் சிலைகள்; 33 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையும் நிறுவப்பட்டது.
இதை, முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்து, கும்பாபிஷேக விழாவில் பேசியதாவது:
நான் நாஸ்திகன் அல்ல, ஆஸ்திகன். எங்கள் ஊரில் ராமர் கோவில் கட்டி கொடுத்தேன். மாநிலத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் ராமர் கோவில்கள் உள்ளன. ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கை அடிப்படையில், ராமரை வழிபடுவர். கோவில் கட்டியும் வழிபடுவர்.
வெறுக்க கூடாது
எந்த மதமும், ஜாதி, -மத அடிப்படையில் மனிதனை வெறுப்பதாக கூறவில்லை. ராமர் ஒரு நேசமானவர். ஒரு முடி திருத்தம் செய்பவரையும், அவர் மதித்தார். ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயரை பிரிக்க முடியாது. அவர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள்.
அனைத்து இன மக்களுக்கும் அமைதிப் பூங்காவாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற குவெம்புவின் விருப்பம். ராமனின் லட்சியத்திலும் ஆளுமையிலும் அதுவே உள்ளது. மனிதன் மனிதனை வெறுக்கக் கூடாது என்பதே ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் செய்தி.
ராமாயணத்தை எழுதி, உலகுக்கு வழங்கியவர் தலித் சமூகத்தை சேர்ந்த வால்மீகி. நம் உள்ளத்திலும் உடலிலும் கடவுள் இருக்கிறார் என்றார் பசவண்ணர். உடலே கோவில் என்ற செய்தியை உலகிற்கு மனிதன் வழங்கியுள்ளான்.
ஜெய் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. இது ஒவ்வொரு பக்தனின் சொத்து. அதர்மம் மற்றும் மனிதாபிமானமற்ற வேலைகளை செய்து நாடக வழிபாடு செய்தால், அந்த வழிபாட்டை கடவுள் ஏற்று கொள்வதில்லை. அனைத்து உயிர்களும் சமத்துவத்துடனும், அன்புடனும் வாழ வேண்டும் என்பதே ஸ்ரீராமரின் லட்சியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியில், ஜெய்ஸ்ரீராம் என்று முதல்வர் சொல்ல, ஜெய் ஜெய் ஸ்ரீராம் என்று விழாவுக்கு வந்தவர்கள் கோஷம் எழுப்பினர். இவ்வளவு நாட்களாக முதல்வரை, நாஸ்திகன் என்று தான் கர்நாடக மக்கள் கேள்விப்பட்டிருந்தனர். தற்போது அவரே தன்னை ஆஸ்திகன் என்று கூறியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழாவில், அமைச்சர்கள் பைரதி சுரேஷ், ஈஸ்வர் கன்ட்ரே, முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்தராஜு, மஹாதேவபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., மஞ்சுளா, முன்னாள் அமைச்சர்கள் எச்.எம்.ரேவண்ணா, அரவிந்த் லிம்பாவளி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

