ADDED : மார் 08, 2024 02:19 AM

மாண்டியா: ''எம்.பி., சுமலதாவுக்கு எல்லாம் தெரியும். அவர் அளவுக்கு நான் இல்லை,'' என, விவசாய அமைச்சர் செலுவராயசாமி கிண்டல் அடித்துள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரசில் பணம் வாங்கிக் கொண்டு 'சீட்' தருவதாக, எங்கள் கட்சியில் இருந்து விலகிய, டாக்டர் ரவீந்திரா கூறி உள்ளார். அதற்கு எம்.பி., சுமலதாவும் ஆமாம் போட்டுள்ளார். அவருக்கு என்ன தெரியும்? மாண்டியா தொகுதி பா.ஜ., 'சீட்' பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். அப்படி இருக்கும்போது, எங்களை புகழ்ந்தா பேசுவார்?
மாண்டியா காங்கிரஸ் வேட்பாளர் பெயருக்கு டாக்டர் ரவீந்திரா, ஸ்டார் சந்துரு, மது மாதேகவுடா பெயர்களை பரிந்துரை செய்தோம். கட்சி மேலிடம் யாரைக் கூறுகிறதோ, அவர்கள் வெற்றிக்கு உழைப்போம். ஸ்டார் சந்துரு காங்கிரஸுக்காக பணியாற்றி உள்ளார். அவரது அண்ணன் புட்டசாமி கவுடா சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ராஜ்யசபா தேர்தலில் எங்களை ஆதரித்தார்.
செலுவராயசாமிக்கு, மாண்டியா நாட்டுக்கோழி பற்றி தெரியாது என்று, எம்.பி., சுமலதா கூறி உள்ளார். அவருக்கு அரசியலில் அபார அறிவு உள்ளது.
அவருக்கே எல்லாம் தெரியும். அம்பரிஷும், சுமலதாவும் கலைத்துறையில் பல ஆண்டுகள் இருந்தவர்கள். இதனால் சுமலதா அளவுக்கு நான் இல்லை.
கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.,யாக உள்ளார். அவர் சரியாக வேலை செய்யவில்லை என்று, நாங்கள் என்றாவது குற்றஞ்சாட்டினோமா? ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை அவர் தேவையின்றி விமர்சித்து வருகிறார். கடவுள் அவருக்கு நல்லது செய்யட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

