நான் தான் சீனியர்;எனக்குத்தான் முதல்வர் பதவி: ஹரியானா முன்னாள் அமைச்சருக்கு ஆசை!
நான் தான் சீனியர்;எனக்குத்தான் முதல்வர் பதவி: ஹரியானா முன்னாள் அமைச்சருக்கு ஆசை!
ADDED : செப் 15, 2024 04:16 PM

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பா.ஜ., வெற்றி பெற்றால் எனக்குத் தான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அந்த மாநில முன்னாள் அமைச்சர் விஜ் கோரி உள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜே.ஜே.பி., கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முட்டி மோதுகின்றன.இதில் பா.ஜ., வெற்றி பெற்றால் எனக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், அம்பாலா கன்ட் தொகுதியில் 6 முறை எம்.எல்.ஏ.வாக, வெற்றி பெற்றவருமான அனில் விஜ் மாநில தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர், மனோகர் லால் கட்டார் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். கட்டார் பதவி விலகி, சைனி முதல்வராக பதவி ஏற்ற போது, அனில் விஜ்க்கு மீண்டும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருக்கும் அவருக்கு, இப்போது சட்டசபை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எப்படியாவது முதல்வர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
அவர் கூறியதாவது: ஹரியானா மாநிலத்தில் நான் தான் மூத்த தலைவர். மக்கள் என்னை முதல்வராக்க விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் வரும் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால் எனக்கு முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்றார். ஆனால் ஏற்கனவே முதல்வராக இருக்கும் நயாப் சிங் சைனியை தான் முதல்வராக்க பா.ஜ., தலைமை விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.